மெல்பேர்ணிலுள்ள ஹோட்டலொன்றுக்குள் வலதுசாரி எதிர்ப்பாளர்கள் சிலர், பிரதமரை அணுகியதால் பாதுகாப்பு தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் தங்கும் இடங்கள் தொடர்பான தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும்.
பொது நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்கும்போது அந்த வளாகத்தக்கு வெளியில் போராட்டங்கள் இடம்பெறுவது வழமை. எனினும், இரகசியம் பேணப்படவேண்டிய ஒரு இடத்தில், எதிர்பாளர்கள் உள்நுழைந்ததையடுத்தே பாதுகாப்பு தொடர்பில் அச்சம் எழுந்துள்ளது.
வீட்டுப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கத்தியபடி பிரதமரிடம் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அவர்கள் பிரதமரை நோக்கி செல்ல முற்படுவதை பாதுகாப்பு பிரிவினர் தடுத்தனர். இது தொடர்பான காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தலுக்குரிய பிரச்சாரம் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் பிரச்சாரங்களை சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. இதுவரையில் இப்படியான 10 இற்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனவே, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.