ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற வேண்டும் என ரஷ்யாவும், சீனாவும் விரும்புவதாக தான் தெரிவித்த கருத்து தவறானது என்று செனட்டர் பிரிட்ஜெட் மெக்கென்சி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் பிரதமராவதை சீனாவும், ரஷ்யாவும் விரும்பவில்லை எனவும், லேபர் ஆட்சியையே அவை விரும்புகின்றன எனவும் கூட்டணியின் முன்னணி உறுப்பினரான மெக்கென்சி கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரின் இந்த அறிவிப்பு அரசியல் புயலைக் கிளப்பிவிட்டிருந்தது. இதனையடுத்தே தான் வெளியிட்ட கருத்து தவறானது என அவர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை, இந்தோனேசியாவில் தமது இராணுவ விமானங்களை நிலைநிறுத்துவதற்கு ரஷ்யா முயற்சிக்கின்றது என வெளியான தகவலை உறுதிப்படுத்தவதற்கு முன்னரே எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டார் என லேபர் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் அரசியலுக்காக பொறுப்பற்ற கருத்துகளை எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுவருகின்றார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கிடையிலான இரண்டாவது நேரடி விவாதம் நேற்று நடைபெற்றது. இதன்போது இந்தோனேசிய விவகாரத்தில் தான் தவறிழைத்ததை எதிர்க்கட்சி தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.