டென்மார்க் மற்றும் சுவீடனில் ஒப்பந்த கொலைகளைச் செய்வதற்கு ஆட்களை திரட்ட முயற்சித்தார் எனக் கூறப்படும் 15 வயது சுவீடன் சிறுவன் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு சிட்னியில் உள்ள அவரது குடும்ப வீட்டை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் நேற்று காலை சோதனை செய்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காண்டிநேவிய வன்முறை கும்பல்களுடன் தொடர்புடைய நபரொருவருக்கு ஆஸ்திரேலியா அடைக்கலம் கொடுப்பதாக டென்மார்க் பொலிஸாரிடமிருந்து, சிட்னி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது.
இதன் போது தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மின்னணு சாதனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
கொலை செய்யும் நோக்கத்துடன் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மேற்படி சிறுவன் , சிட்னி சிறார் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டார்.
அவருக்கு பிணை மறுக்கப்பட்ட நிலையில் , எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சபா.தயாபரன்.