தமது நாட்டுடன் தொடர்புபடாத பிரச்சினை தொடர்பில் ஆஸ்திரேலியா தேவையற்ற விதத்தில் மூக்கை நுழைப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தோனேசியாவில் இராணுவ விமானங்களை நிலைநிறுத்துவதற்கு ரஷ்யா முயற்சிக்கின்றது என வெளியான தகவல் தொடர்பில் ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை செலுத்தி இருந்தது.
ஆஸ்திரேலியாவின் டார்வினுக்கு வடக்கே 1,300 கிலோ மீற்றர் தொலைவிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பில் இந்தோனேசியாவுடனும் ஆஸ்திரேலிய பேச்சு நடத்தியது.
இதன்போது இராணுவ விமானங்களை நிலைநிறுத்த அமனுதி வழங்கப்படவில்லை இந்தோனேசியா தெரிவித்தது. எனினும், ரஷ்ய தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதா என்பது பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்தோனேசியாவுக்கான ரஷ்ய தூதுவர், ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார்.
' இந்தினோசியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு, அரசுகளுக்கு இடையிலான உறவுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இது விடயத்தில் ஆஸ்திரேலியா ஏன் கவலைப்படுகிறது." எனவும் தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
' தமது பிரதேசத்திலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவில் என்ன நடக்கிறது என்பது பற்றி கற்பனை அடிப்படையில் கவலைப்படுவது தேவையற்ற விடயமாகும்.
இத்தகைய ஒத்துழைப்பு இரு தரப்பினரின் தற்காப்புத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, எந்த மூன்றாம் நாடுகளுக்கும் எதிரானது அல்ல, மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ரஷ்யா ஏற்படுத்தாது." - எனவும் இந்தோனேசியாவுக்கான ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.