கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் இறுதிச் சடங்கில் ஆஸ்திரேலியாவின் சார்பில் ஆளுநர் சாம் மோஸ்டின் பங்கேற்கவுள்ளார்.
பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அன்சாக் தின நினைவு கூட்டத்தில் பங்கேற்பதற்காக துருக்கி சென்றுள்ள ஆளுநர், அங்கிருந்து வத்திக்கான் செல்வார் என தெரியவருகின்றது.
அத்துடன், வத்திக்கானுக்கான ஆஸ்திரேலிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கீத் பீட்டும் இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்குரிய இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்திருந்தது.
எனினும், போப் பிரான்சிஸின் மறைவையடுத்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தமது பிரச்சாரத்தை இன்று நிறுத்திவைத்துள்ளனர்.
அத்துடன், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலுக்குரிய முன்கூட்டிய வாக்கு பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய போப் பிரான்சிஸ், நேற்று காலமானார்.
மிக நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த அவர், தனது 88-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை உலகிலேயே அதிக சொத்து கொண்ட மத ரீதியான ஒரு நிறுவனமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 1.3 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், ஓர் எளிமையான தலைக்கனமில்லாத நபராக, தனது வாழ்க்கையை வாழ்ந்தற்காக போற்றப்படுபவர்.