சிட்னியில் பெண் கடத்தப்பட்டு கொலை: பின்னிணியில் பாதாள குழு!
சிட்னியில் பெண்ணொருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பாதாள குழு செயற்பாடு உள்ளதென நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிட்னி தென்மேற்கில் கடந்த வியாழக்கிழமை இரவு ஆயுதம் ஏந்திய ஐந்து நபர்களால் 45 வயதான குறித்த பெண் கடத்தப்பட்டிருந்தார்.
வீட்டில் இருந்த இரு சிறார்களும் தாக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 8 வயது சிறுவர் ஒருவர் கோமா நிலைக்கு சென்றார். பொலிஸ் பாதுகாப்புடன் அவர்கள் தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
குறித்த பெண் கடத்தப்பட்டு ஒரு மணிநேரத்துக்கு பிறகு எரிந்த நிலையில் காணப்பட்ட காரில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
இப்பெண்ணின் ஆண் துணைக்கு விக்டோரியாவில் உள்ள பாதாள குழுவுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இந்த பாதாள குழு வலையமைப்பில் வியட்நாமை சேர்ந்த ஆண்கள் பெருமளவில் அங்கம் வகிக்கின்றனர்.
எனவே, பாதாள குழுவுடனான தொடர்பால் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. ஆண் துணையிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வியட்நாமில் உள்ளனர் எனவும், அவர்களை தொடர்புகொள்வதற்கு நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.