போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு வத்திக்கானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபை அமைப்பில் 252 கார்டி னல்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வத்திக்கான் நோக்கி பயணித்துக்கொண்டுள்ளனர்.
அதுபோல கத்தோலிக்க மதத்தின் மூத்த நிர்வாகிகள் உலகம் முழுவதும் இருந்து ரோமுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் ரோம் நகரில் கட்டுக் கடங்காத கூட்டம் ஏற்பட்டு உள்ளது.
வத்திக்கானில் திரண்டு உள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் பிரான்ஸிசுக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
போப் பிரான்சிஸ் உடல் நேற்று பதப்படுத்தப்பட்டது. நேற்று இரவு அவரது உடல் காசா சந்தாமர்தா ஆலயத்தில் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அப்போது சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.
போப் ஆண்டவரின் உடல் நாளை காலை வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும். அங்கு போப் ஆண்டவருக்கு பொதுமக்கள் மற்றும் கத்தோலிக்க மத குருக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலை அவரது விருப்பப்படி மிக மிக எளிய முறையில் வத்திக்கான் நகருக்கு வெளியே நல்லடக்கம் செய்ய கத்தோலிக்க மூத்த மத குருக்கள் முடிவு செய்து உள்ளனர்.
போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது மனைவியுடன் ரோம் நகருக்கு சென்று போப் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
75-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.