ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸி முன்னிலையில் இருப்பதாக தெரிகின்றது.
ஆஸ்திரேலியாவில் மே 03 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றது. அதற்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு இன்று ஆரம்பமானது.
அதிகரிக்கும் பொருளாதார செலவு, வீட்டுப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் லேபர் கட்சிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படக்கூடும் எனக் கருதப்பட்டது.
எனினும், லேபர் கட்சி, கூட்டணியைவிட சற்று முன்னிலை பெற்றிருப்பதாக கருத்துக்கணிப்பில் தற்போதைய கருத்து கணிப்பு தெரிவிக்கின்றது.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனின் சில திட்டங்கள், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கும் எலான் மாஸ்க்கின் அரசாங்க திறன் துறையின் செயல்பாடுகளோடு ஒத்துப் போவது போன்று இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தேர்தலில் அவருக்கான ஆதரவு குறைந்துள்ளது.
அதாவது, அரசு ஊழியர்கள் முழு நேர வேலைக்கு அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். பொதுத்துறை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வேலையிழக்கும் திட்டம் ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால், அதனை டட்டன் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடந்த ஜனவரியில் டட்டனின் லிபரல் கட்சி கூட்டணி ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. தற்போது ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரதமர் அல்பானீஸ் 9 புள்ளிகள் வரை கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்றுள்ளார்.