நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த தொகுதியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மண்கவ்வியுள்ள நிலையில், லிபரல் கட்சி புதிய தலைவரை நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் அரியணையேறும் மக்கள் ஆணையை பிரதமர் அந்தோனீ அல்பானீஸி தலைமையிலான லேபர் கட்சி பெற்றுள்ளது.
தேர்தலில் லிபரல் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைவிடவும் பிரதமர் வேட்பாளர் பீட்டர் டட்டன் தனது அரசியல் கோட்டையில், பெண் வேட்பாளர் ஒருவரால் மண்கவ்வ வைக்கப்பட்டமை சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் டிக்சன் தொகுதியை பீட்டர் டட்டன் தக்கவைத்துவந்தார். அவரின் அரசியல் கோட்டையாகவும் அது கருதப்படுகின்றது. எனினும், இம்முறை லிபரல் கட்சி வேட்பாளர் அலி பிரான்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.
இந்நிலையில் லிபரல் கட்சிக்கு புதிய தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.
லிபரல் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு மொரிசன் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த ஆங்கஸ் டெய்லரின் பெயர் அடிபடுகின்றது.
லிபரல் ஆட்சியில் துணை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஆண்ட்ரூ ஹேஸ்டி மற்றும் தற்போதைய துணை எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே ஆகியோரின் பெயர்களும் புதிய தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
விக்டோரியா, Wannon தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டான் டெஹானின் பெயரும் பரிசீலனையில் உள்ளது என லிபரல் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் கட்சி தோல்வி அடைந்தமைக்குரிய பொறுப்பை ஏற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர், விரைவில் தலைமைப்பதவியை துறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.