ஆஸ்திரேலிய அரசியல் களத்தில் இரும்பு மனிதனாகக் கருதப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனை, அவரது அரசியல் கோட்டையிலேயே மண்டியிடவைத்த பெண் அரசியல்வாதி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
விபத்தில் தனது ஒற்றைக் காலை இழந்து, மகனையும் பறிகொடுத்து - தனிப்பட்ட வாழ்விலும் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்ட அவரின் வெற்றியை லேபர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
பிரிஸ்பேனில் டிக்சன் தொகுதியென்பது பீட்டர் டட்டனில் அரசியல் கோட்டை. 2001 ஆம் ஆண்டுமுதல் அத்தொகுதியில் அவர் வென்று வருகின்றார். லிபரல் கட்சி பின்னடைவுகளை சந்தித்தவேளைகளில்கூட அத்தொகுதியில் பீட்டர் டட்டனுக்குரிய செல்வாக்கு சரியவில்லை.
இந்நிலையில் இம்முறை பீட்டர் டட்டனை, லேபர் கட்சி வேட்பாளரான அலி பிரான்ஸ் , டிக்சன் தொகுதியில் மண்கவ்வ வைத்துள்ளார்.
அத்தொகுதியில் தனக்கான வெற்றியை இம்முறை உறுதிப்படுத்தி - முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.
அவருக்கு எதர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
49 வயதான அலி பிரான்ஸ் , கடந்த வருடம் தனது மூத்த மகனை பறிகொடுத்தார். புற்றுநோயால் அவர் உயிரிழந்தார்.
தனது 2 ஆவது மகன் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. இவ்விபத்தில் தனது மகனை காப்பாற்றுவதற்கு முற்பட்டவேளையிலேயே அலி பிரான்ஸ் தனது ஒரு காலை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அவரது திருமண வாழ்வுகூட சோகத்திலேயே முடிந்துள்ளது. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் அரசியலில் அவர் சாதித்துக்காட்டியுள்ளார். அவரை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.
அத்துடன், லேபர் கட்சியின் வெற்றிக்கு சமாந்தரமாக லேபர் கட்சி ஆதரவாளர்களால் இவரின் வெற்றியும் கொண்டாடப்படுகின்றது.
ஆர்.எஸ்.