உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தென்னிலங்கைளில் வெற்றி நடைபோடும் தேசிய மக்கள் சக்தி, தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பவற்றுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஈபிடிபியும் உறுப்பினர்களை வென்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 இடங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 12 இடங்களையும், தேசிய மக்கள்சக்தி 10 இடங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 4 இடங்களை யும், ஈ.பி.டி.பி. 4 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி ஓர் இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் இடத்தையும் பெற்றுள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகர சபைகளிலும்முன்னிலையை அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ்மக்கள் பேரவை பெற்றுக்கொண்டது.
எனினும், சாவகச்சேரி நகர சபையில் அத்தத் தரப்புக்கு 6 இடங்களும், தமிழரசுக்கு ஆறு இடங்களும் கிடைத்துள்ளன.
கோப்பாயில் தமிழரசுக்கு 11 இடங்களும், தேசிய மக்கள் சக்திக்கு ஒன்பது இடங்களும், தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவை தலா ஐந்து இடங்களை யும், தமிழ் மக்கள் கூட்டணி இரண்டு இடங்களையும், ஒரு சுயேச்சைக் குழு இரண்டு இடங்களையும், மற்றொன்று ஓர் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
கிழக்கில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முஸ்லிம் கட்சிகள் வென்றுள்ளன.
கடந்த பொதுத்தேர்தலில் வடக்கில் யாழ். மாவட்டம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டம் என்பவற்றை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி இருந்தது. கிழக்கில் திருமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும் அக்கட்சி வசமாகியமை குறிப்பிடத்தக்கது.