சாகோஸ் தீவுகளின் உரிமையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்த பிரிட்டன், அதன் இறையாண்மையை மொரீஷியசுக்கு மாற்ற தீர்மானித்துள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடான மொரீஷியஸ், 1968 வரை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. அதன்பின் முழு சுதந்திரம் பெற்றது. இருப்பினும் மொரீஷியஷின் சாகோஸ் தீவுக்கூட்டத்தை பிரித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசம் என்ற பெயரில் பிரிட்டன் நிர்வகித்து வந்தது.
சாகோஸ் தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவில், அமெரிக்கா - இங்கிலாந்து விமான தளமும் உள்ளது. 99 ஆண்டு குத்தகை அடிப்படையில், இந்த விமான தளத்தை இரு நாடுகளும் கூட்டாக அமைத்துள்ளன.
இந்நிலையில், சாகோஸ் இறையாண்மையை மொரீஷியசுக்கே வழங்க பிரிட்டன் ஒப்புக்கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் நேற்று கையெழுத்திட்டார்.
அதே சமயம், டியாகோ கார்சியாவில் உள்ள விமான தளத்தின் பாதுகாப்பு பிரிட்டன் வசமே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
நிலையான மற்றும் வளமான பிராந்தியத்தை ஆதரிக்கும் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதன் மதிப்பை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.