இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 400 இற்கு மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளால், அங்குள்ள இலட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இஸ்ரேல் புலனாய்வு தலைமையகம் மற்றும் விமான நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் தொடர்பில் ஈரான்மக்கள் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும், இதற்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்த சம்பவம் மத்திய கிழக்கில் பதற்றமான சூழலை உருவாக்கியது.
தொடர்ந்து ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் {ஹசைன் சிரோர், மற்றொரு உயர்மட்ட தளபதியான நபில் கவுக் ஆகியோரை அடுத்தடுத்து இஸ்ரேல் இராணுவம் கொன்றது.
லெபனான் மீதான தொடர் தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட லெபனான் மீது இஸ்ரேல் நேற்று தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் லெபனானில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் இந்த தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஈரான் இராணுவம் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
அதேவேளை இஸ்ரேல்மீதான ஈரானின் தாக்குதலை ஆஸ்திரேலிய பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
“இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது.
இது மிகவும் ஆபத்தான விரிவாக்கம். ஆஸ்திரேலியாவும் உலக சமூகமும் தங்கள் கோரிக்கைகளில் தெளிவாக உள்ளன.
பகைமை பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்.” – எனவும் பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலால் பாரிய பாதிப்புகள் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.