ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரும், டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளருமான நிக் ஆடம்ஸ் (Nick Adams) என்பவரே ட்ரம்பின் சர்ச்சைக்குரிய படத்தை முதன்முதலில் தயாரித்து வெளியிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் தன்னை இயேசு கிறிஸ்து போல் காண்பிக்கும் AI புகைப்படத்தை தனது 'Truth Social' தளத்தில் பகிர்ந்தார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், சிட்னியில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் நிக் ஆடம்ஸ், கடந்த பிப்ரவரி மாதமே இந்தப் படத்தை முதலில் பகிர்ந்திருந்தார்.
"அமெரிக்கா நீண்ட காலமாக நோயுற்றுள்ளது, ஜனாதிபதி ட்ரம்ப் இந்தத் தேசத்தைக் குணப்படுத்துகிறார்" என்ற வாசகத்துடன் அவர் இதைப் பதிவிட்டிருந்தார்.
நிக் ஆடம்ஸை அமெரிக்கச் சுற்றுலா மற்றும் மதிப்பீடுகளுக்கான சிறப்புத் தூதராக (Special Presidential Envoy for American Tourism, Exceptionalism and Values) ட்ரம்ப் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புகைப்படம் ஈஸ்டர் பண்டிகை காலத்தை ஒட்டி பகிரப்பட்டதால், இது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், தன்னைத்தானே கடவுளுக்கு நிகராகச் சித்தரிப்பதாகவும் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஈரான் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்த திருத்தந்தையை (Pope) சீண்டும் விதமாக ட்ரம்ப் இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கலாம் என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தன்னை ஒரு 'மெசியா' (Messiah - இரட்சகர்) போலக் காட்டிக்கொள்ளும் ட்ரம்பின் இத்தகைய முயற்சிகள் அவரது ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், பொதுவெளியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.