ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஹாக்ஸ்பரி (Hawkesbury) பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
10 வயதான மைலா சம்மர்-லீ ஹியூஸ் (Myla Summer-Lea Hughes) மற்றும் அவரது 3 வயது தம்பி ரிவர் வில்லியம் ஹிக்கின்ஸ் (River William Higgins) ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர்.
இந்தக் குடும்பம் தங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்காக, விபத்து நடந்த அடுத்த நாள் குயின்ஸ்லாந்து பகுதிக்கு குடிபெயரத் திட்டமிட்டிருந்தது.
விபத்து நடந்த திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில், தாய் ஸ்கை ஹியூஸ் (Skye Hughes) ஒரு குழந்தையுடன் ஏற்கனவே குயின்ஸ்லாந்தில் தங்கியிருந்தார்.
தந்தை டேவிட் ஹிக்கின்ஸ் (David Higgins) மற்ற ஐந்து குழந்தைகளுடன் சிட்னிக்கு வடமேற்கே 77 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போவன் மலை (Bowen Mountain) வீட்டில் இருந்தபோதே இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
தந்தை டேவிட்டும் மற்ற நான்கு குழந்தைகளும் தீயிலிருந்து தப்பியோடிய போதிலும், இந்த இரண்டு பிஞ்சுகளையும் காப்பாற்ற முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமது பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" இந்த இக்கட்டான நேரத்தில் ஆதரவு வழங்கிய அவசர காலப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களின் இறுதிச் சடங்குகள், குடும்பத்திற்கான அவசர தங்குமிட வசதிகள் மற்றும் மனநல ஆலோசனைகளுக்காக நிதி திரட்டும் பக்கம் (Fundraising page) ஒன்று பெற்றோரின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
"ஆழமான அன்புடனும் பெரும் கனவுகளுடனும் வளர்க்கப்பட்ட இந்த இரு உயிர்களின் இழப்பும், சொல்லொணாத் துயரத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளதாக" அந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
புதிய வீட்டிற்குச் சென்று அனைவரும் ஒன்றாக இணையவிருந்த நிலையில், இந்தத் தீ விபத்து ஒரு குடும்பத்தின் கனவுகளைச் சாம்பலாக்கியுள்ளது.