வங்கி கட்டணங்களால் பணத்தை இழக்கும் ஆஸ்திரேலிய குடும்பங்கள்: ஒரே ஆண்டில் 4 பில்லியன் டாலர் காலி!
ஆஸ்திரேலியர்கள் கடந்த நிதியாண்டில் மட்டும் தங்களது வங்கி கட்டணங்களுக்காக (Bank fees) 4.1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக மத்திய வங்கியின் (RBA) தரவுகள் தெரிவிக்கின்றன.
இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 268 மில்லியன் டாலர் அதிகமாகும்.
வணிக ரீதியிலான வங்கி கட்டணங்களைத் தவிர்த்து, சராசரியாக ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் ஆண்டுக்கு 412 டாலர்களை இத்தகைய மறைமுக மற்றும் இதர வங்கி கட்டணங்களுக்காகவே இழக்கிறது.
இதில் கிரெடிட் கார்டுகளே (Credit cards) மக்களின் பணத்தை அதிகம் உறிஞ்சும் முதன்மைக் காரணியாக விளங்குகின்றன.
கடந்த நிதியாண்டில் கிரெடிட் கார்டு கட்டணங்கள் மட்டும் 10 சதவீதம் உயர்ந்து, 1.7 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சராசரி கிரெடிட் கார்டு ஒன்றின் ஆண்டுக் கட்டணம் (Annual fee) 204 டாலராக உள்ளது. இது தவிர, வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை கட்டணங்கள் (Overseas transaction fees) மற்றும் ஆண்டுக் கட்டணங்களின் உயர்வும் இந்த அளவுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டதற்குக் காரணமாகும்.
அதேபோல், வீட்டுக் கடன்களுக்கான (Home loans) கட்டணங்கள் 17 சதவீதம் (167 மில்லியன் டாலர்) உயர்ந்துள்ளன.
ஆஸ்திரேலியர்கள் பலர் தங்களது வீட்டுக் கடன்களை மறுநிதியளிப்பு (Refinancing) செய்ய முயன்றதே இக்கட்டண உயர்வுக்கான முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், தாமதக் கட்டணங்கள் (Late fees) மற்றும் கணக்கில் போதிய பணம் இல்லாததற்கான கட்டணங்கள் (Overdraft charges) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 13 மில்லியன் டாலர் வரை குறைந்துள்ளன .
கட்டணங்களைக் குறைக்க நிபுணர்களின் ஆலோசனை
இவ்வளவு பெரிய தொகையை வங்கி கட்டணங்களாக வீணாக்குவதைத் தவிர்க்க, மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று நிதி ஒப்பீட்டு நிறுவனமான 'கேன்ஸ்டார்' (Canstar) தெரிவித்துள்ளது.
ஆண்டுக் கட்டணம் மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைக் கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்தல்.
குறைவான அல்லது ஆண்டுக் கட்டணமே இல்லாத வீட்டுக் கடன் திட்டங்களை நாடுதல்.
தற்போதைய வங்கியாளர்களிடம் பேசி இக்கட்டணங்களைக் குறைக்கக் கோருதல் அல்லது கட்டணங்கள் இல்லாத பிற வங்கிகளுக்கு மாறுதல்.
இது குறித்து கேன்ஸ்டார் நிறுவனத்தின் தரவு நுண்ணறிவு இயக்குநர் சாலி டின்டால் (Sally Tindall) கூறுகையில்,
"வங்கி கட்டணங்கள் கடந்த 12 மாதங்களில் மட்டும் 268 மில்லியன் டாலர் வரை அசுர வேகத்தில் வளர்ந்துள்ளன. ஆனால், மக்கள் நினைத்தால் தங்களின் விழிப்புணர்வான தேடல்கள் மற்றும் முறையான பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த தேவையற்ற கட்டணங்களை பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.