கட்சிக்கும் தனக்கும் இடையே பல வாரங்களாக நிலவி வந்த கசப்பான சூழலைத் தொடர்ந்து, லிபரல் கட்சியிலிருந்து (Liberal Party) நாடாளுமன்ற உறுப்பினர் மொய்ரா டீமிங் (Moira Deeming) ராஜினாமா செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிக்கையில், தான் இனி ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகக் குறுக்குவரிசைச் (Crossbench) உறுப்பினர்களுடன் அமரவுள்ளதாக டீமிங் தெரிவித்துள்ளார்.
"எனது கவனிப்பு எப்போதும் சாதாரண ஆஸ்திரேலியர்களின் தேவைகளையும் கவலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதிலேயே இருந்தது, அதுவே தொடரும்" எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெஸ் வில்சன் (Jess Wilson), டீமிங்கின் இந்த முடிவைச் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
மேற்கு மெட்ரோபாலிட்டன் பிராந்தியத்தின் முதல்முறை மேலவை உறுப்பினரான (Upper House MP) டீமிங், எதிர்வரும் நவம்பர் மாதத் தேர்தலுக்கான அவரது வேட்புமனுவை ரத்து செய்யக் கட்சி வாக்களித்ததைத் தொடர்ந்து, லிபரல் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையின் முடிவை ஏற்கனவே எதிர்கொண்டிருந்தார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வில், தனது கட்சி சகாவான மேத்யூ கை (Matthew Guy) தன்னைத் தாக்கியதாகத் டீமிங் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.