ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை சோகத்தில் முடிவடைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி சிட்னியிலுள்ள தனது வீட்டிலிருந்து தேசிய பூங்காவிற்கு நடைபயணம் (Bushwalking) சென்ற லிலி ஹூப்பர், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடாய் தேசிய பூங்காவிலுள்ள (Nattai National Park) மிகவும் ஆபத்தான பாதையின் அடிவாரத்திலிருந்த நிறுத்துமிடத்தில் அவரது கார் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு ஹைலேண்ட்ஸ் (Southern Highlands) காட்டுப் பகுதியில் வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அது லிலி ஹூப்பருடையதுதான் என நம்பப்படும் நிலையில், உத்தியோகபூர்வ அடையாளங்காணல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, நாடாளுமன்றக் விசாரணையின் போது நியூ சவுத் வேல்ஸ் பிராந்திய பிரீமியர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns), லிலி ஹூப்பர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தவறாக அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
எனினும், சில நிமிடங்களிலேயே தனது கூற்றைத் திருத்திக் கொண்ட அவர், லிலி ஹூப்பர் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியதுடன், இச்சம்பவத்திற்காகத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த ஒரு வாரமாக ஹெலிகொப்டர்கள், மோப்ப நாய்கள், பழக்கப்பட்ட குதிரைகள் மற்றும் வீதி மோட்டார் சைக்கிள்கள் சகிதம் பொலிஸாரின் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.