ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பாலியல் உறவின் போது மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டதால் (Choking during sex) 16 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிட்னியின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள எலனோரா ஹாய்ஸ்ட் (Elanora Heights) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி சுயநினைவின்றி இருப்பதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர், ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் ‘ராயல் நார்த் ஷோர்’ வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமி, செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலியல் உறவின் போது கழுத்து நெரிக்கப்பட்டதால் அச்சிறுமி சுயநினைவை இழந்து உயிரிழந்திருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், சிறுமியின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் மற்றும் காயம் குறித்த விவரங்களை காவல் துறை இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே இதுபோன்ற அபாயகரமான பழக்கம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தலைவலி, நினைவாற்றல் இழப்பு, மூளைச் சாவு மற்றும் அரிதான சூழல்களில் மரணம் கூட நேரலாம் என எச்சரிக்கின்றனர்.
இது குறித்து பாலியல் ஒப்புதல் விழிப்புணர்வுப் பிரசாரகர் சானல் கான்டோஸ் (Chanel Contos) கூறுகையில், "இந்த மரணத்தைத் தடுத்திருக்க முடியும். ஆபாசப் பட நிறுவனங்களின் கைகளில் இதற்கான ரத்தம் படிந்துள்ளது. மெயின்ஸ்ட்ரீம் ஆபாசப் படங்கள் பெண்கள் மீதான வன்முறையைச் இயல்பான ஒன்றாகச் சித்தரிக்கின்றன. பாலியல் உறவின் போது கழுத்தை நெரிப்பதற்குப் பாதுகாப்பான வழி என்று எதுவுமே இல்லை" என்று சாடினார்.
மெல்போர்ன் மற்றும் குயின்ஸ்லேந்து பல்கலைக்கழகங்கள் 2024-இல் நடத்திய ஆய்வின்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்களில் 57 சதவீதம் பேர் பாலியல் உறவின் போது தங்கள் கழுத்து நெரிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.