சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குழந்தை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு பெண் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குழந்தையின் தாய் என காவல்துறையினரால் சந்தேகிக்கப்படும் 24 வயது பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் திகதி காலை 11:20 மணியளவில், ஆபர்ன் பகுதியில் உள்ள ஹாரோ சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் ஆண் குழந்தை ஒன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது முதல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
சம்பவ இடம் குற்றவியல் பகுதியாக அறிவிக்கப்பட்டு, துப்பறியும் அதிகாரிகள் 'ஸ்டிரைக் போர்ஸ் அலேனார்' என்ற சிறப்பு விசாரணைப் பிரிவைத் தொடங்கினர்.
குழந்தையின் உடலைக் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
விரிவான விசாரணைகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை காலை 6:45 மணியளவில் அதிகாரிகள் ஹாரோ சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் சோதனை வாரண்ட்டைச் செயல்படுத்தியதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
"சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆபர்ன் பகுதியில் உள்ள மற்றொரு முகவரியில், குழந்தையின் தாய் என்று நம்பப்படும் 24 வயது பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
"மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண் கைது செய்யப்பட்டு ஆபர்ன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்."
"அந்த 24 வயது பெண் மீது 'உடலை அகற்றிப் பிறப்பை மறைத்தல்' என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது."
அப்பெண்ணுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் அடுத்த மாதம் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
குழந்தை கண்டெடுக்கப்பட்ட நாளில் செய்தியாளர்களிடம் பேசிய பதில் சூப்பிரண்டன்ட் டேரன் ஸ்லை, காவல்துறையினர் தாயைத் தேடி வருவதாகவும், அவரது உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கே தங்களது முதல் முன்னுரிமை என்றும் வலியுறுத்தினார்.
"காவல்துறை நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட வேண்டும் என்றால், அது எங்கள் முன்னுரிமையே அல்ல" என்று ஸ்லை கூறினார்.
"அந்தத் தாயின் நலனைக் காப்பதும், அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதை உறுதி செய்வதும் மட்டுமே இந்த தருணத்தில் எங்களின் ஒரே முன்னுரிமையாகும்."