இஸ்லாம் மதத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழரான சிவராஜா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டதாகவும், அதனை 7 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அனோஜனின் உறவினர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகமொன்றின் இலங்கைச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வடபகுதியிலிருந்து கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை சென்ற குழுவினர், தம்முடன் சுப்பிரமணியம் என்ற பெயருடைய நாய் ஒன்றையும் அழைத்துச் சென்றிருந்தனர்.
இதன்போது கல்முனைப் பகுதியில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் குறித்த நாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் அனோஜன் பதிவிட்ட கருத்தொன்றே அவருக்குப் பெரும் பிரச்சினையாக மாறியது. சிறிது நேரத்திலேயே அவர் அப்பதிவை அகற்றியபோதிலும், அதனைச் சிலர் 'ஸ்கிரீன்ஷாட்' (Screenshot) எடுத்துப் பகிர்ந்ததுடன், அது குறித்துச் சவூதி அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்தே அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உறவினர்களின் கோரிக்கைக்கமைய மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைகளின் முடிவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் அனோஜன் தனது உறவினர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்ற போதிலும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
அதேவேளை, அனோஜனை விடுவிப்பதற்குரிய ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.