'வன் நேஷன்' (One Nation) கட்சியின் முக்கியக் கொள்கையால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யத் தவறினாலும்கூட, அக் கட்சியின் குடியேற்றக் கொள்கை திட்டத்தால் அடுத்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு $118 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பு ஏற்படும் என பிரபல பொருளாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
Pauline Hanson மற்றும் திறைசேரியின் பேச்சாளர் பார்னபி ஜோய்ஸ் (Barnaby Joyce) ஆகியோர் குடியேற்றம், ஓய்வூதியம் (Superannuation) மற்றும் புகையிலை தொடர்பான முக்கியக் கொள்கைகளை இந்த மாதம் வெளியிட்டனர்.
எனினும், அக்கொள்கைகளின் நிதித் தாக்கத்தை மதிப்பிட்டு மாதிரித் தயாரிக்குமாறு (modeling) நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட அலுவலகத்திடம் (PBO) அவர்கள் கோரிக்கை விடுக்கவில்லை.
சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்க அளவிலான பகுப்பாய்வு கிடைக்காத நிலையில், அவர்களுக்குச் சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவே 'PBO' சேவை இலவசமாகவும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது.
பொருளாதார நிபுணரான சாவுல் எஸ்லேக் (Saul Eslake) இது குறித்துக் குறிப்பிடுகையில், "PBO-வில் பொருளாதார நிபுணர்கள் பணியாற்றுவதாலும், 'வன் நேஷன்' கட்சிக்கு பொருளாதார நிபுணர்களைப் பிடிக்காது என்பதாலும் அவர்கள் இவ்வாறு செய்யவில்லையோ என்னவோ" எனத் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
குடியேற்றக் கொள்கை
'வன் நேஷன்' கட்சி மூன்று ஆண்டுகளில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை 750,000 ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இது அந்நாட்களில் எதிர்மறையான நிகர வெளிநாட்டு குடியேற்றப் புள்ளிவிவரத்தை உருவாக்கும்.
கடந்த தேர்தலில் குடியேற்றத்தைக் குறைப்பதாகக் கூட்டணி வழங்கிய திட்டத்தை விட இந்த இலக்கு ஐந்து மடங்கு அதிகமாகும்.
கூட்டணியின் திட்டம் குறித்து PBO வெளியிட்ட கணிப்பின்படி, 2028-29 வரை 4 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் கடன் $3.4 பில்லியனாலும், 2035-36 வரை பத்தாண்டுகளில் $23.6 பில்லியனாலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 'வன் நேஷன்' கட்சியின் திட்டத்தால் முதல் நான்கு ஆண்டுகளில் $17 பில்லியனும், முதல் பத்தாண்டுகளில் $118 பில்லியனும் வரவுசெலவுத் திட்டத்திற்கு இழப்பு ஏற்படும் என எஸ்லேக் கணித்துள்ளார்.
மொத்தச் செலவு இதைவிடக் குறைவாக இருந்தாலும், அது கணிசமானதாகவே இருக்கும் என எஸ்லேக் சுட்டிக்காட்டினார்.
"நிச்சயமாக, குடிவரவு குறைப்பினால் ஏற்படக்கூடிய பரந்த பொருளாதாரச் செயல்பாடுகளின் தாக்கத்தை PBO-வின் செலவின மதிப்பீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை...
குறைந்த எண்ணிக்கையிலான குடியேறிகளின் செலவினக் குறைவு, ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும்.
இதனால் அவர்கள் செலுத்தும் வரி குறைவதுடன், வேலையற்றோர் உதவித்தொகை மற்றும் பிற சமூக சேவைகளை அவர்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று அவர் கூறினார்.