காரை நிறுத்திவிட்டு, மூன்று குழந்தைகளைக் கத்தியால் குத்தியதாக ஒரு பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், இரு குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் ஸ்பிரிங்வுட் (Springwood) அருகே உள்ள வேலி ஹைட்ஸ் (Valley Heights) பகுதிக்கு அவசரக் கால மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
அப்பகுதி வழியாகச் சென்ற மிதிவண்டிப் பயணிகள், காரொன்றில் தீவிர கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவரைக் கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக 000 (Triple Zero) என்ற அவசர எண்ணிற்கு அழைப்பு விடுத்த பொதுமக்கள், அந்தப் பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் முதலுதவி அளித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திலேயே ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான். காயமடைந்த மற்ற இரு குழந்தைகளுக்கும் அந்தப் பெண்ணிற்கும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே தீவிர சிகிச்சையளித்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக வெஸ்ட்மீட் மருத்துவமனை மற்றும் வெஸ்ட்மீட் சிறுவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இன்று காலை இது குறித்துப் பேசிய பெருநகர கள செயல்பாடுகளுக்கான துணை ஆணையர் பீட்டர் மெக்கென்னா (Peter McKenna), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் குணமடைந்தால், அவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படும் என்று உறுதிப்படுத்தினார்.
தாக்குதல் அனைத்தும் காரின் உட்பகுதியிலேயே நடந்துள்ளதாகத் தெரிகிறது என்றும், ஆனால் அந்தப் பெண் ஏன் அந்த இடத்தை தேர்வு செய்தார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் மெக்கென்னா கூறினார்.
மேலும், அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள காயங்கள் அவராகவே ஏற்படுத்திக் கொண்டவை (சுயகாயம்) என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.
இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் காவல் கண்காணிப்பாளர் ஜான் நெல்சன் (John Nelson) கூறுகையில், "விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்களை வெளியட முடியாது" என்றார்.
குழந்தைகளின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகக் கூறிய அவர், வழக்கமான பணிக்குச் சென்றிருந்த வேலையில் இந்தத் துயரச் செய்தியைக் கேட்ட தந்தையின் நிலை விவரிக்க முடியாதது என்றார்.
சம்பவ இடத்தில் குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு எவரையும் காவல்துறை தேடவில்லை. இந்தச் சம்பவம் காவல்துறையினர் மற்றும் பார்த்த பொதுமக்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.