செயற்கை நுண்ணறிவு (AI) முகவர் மூலம் ஆஸ்திரேலிய அரசாங்க வலைத்தளத்தின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் அல்பானீஸ், OpenAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI முகவர் ஒன்று, கடந்த ஜூன் மாதம் அரசாங்கத்தின் மருத்துவ உதவிப் போர்ட்டலில் (Medicare portal) இருந்த பொது மற்றும் பொது அல்லாத தரவுகளை அணுகியுள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய ஆன்லைன் பாதுகாப்புச் சட்டங்கள், வயதுத் தடைகள் மற்றும் முன்மொழியப்பட்ட டிஜிட்டல் கடமைப் பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் தொழில்நுட்ப விதிமுறைகளைக் கடுதாக்கி வருகிறது.
இந்த ஹேக் சம்பவம் குறித்து கன்பராவின் தீவிர கவலையை வெளிப்படுத்திய அல்பானீஸ், இந்த மீறலை ஒப்புக்கொள்ள அந்த நிறுவனத்திற்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டமை ஏமாற்றமளிப்பதாகக் கூறி, OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு பதிலளித்த OpenAI , இது குறித்து இன்னும் விசாரணை நடத்தி வருவதாகவும், எனினும் நோயாளிகளின் பதிவுகள் எதுவும் அணுகப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் கூறியது.
புதன்கிழமை நடைபெற்ற 15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்திற்கு முன்பு, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைவர்கள் ஒழுங்குபடுத்தப்படாத AI வளர்ச்சியின் அபாயங்கள் குறித்து எச்சரித்தனர்.