சிட்னியின் வடமேற்குப் பகுதியில் உள்ள நார்வெஸ்ட் (Norwest) குடியிருப்புத் தொகுதி ஒன்றில் முகத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் பெறப்பட்ட அவசர அழைப்பையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சிறுவனின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
சம்பவ இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன், வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் உயிரிழந்ததாக நியூ சவுத் வேல்ஸ் (NSW) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை இச்சம்பவம் நடந்தபோது குறித்த குடியிருப்பில் மேலும் ஐந்து பேர் இருந்துள்ளனர்; எனினும் அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய மூன்று இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்தபோதிலும், இருவர் மேலதிக விசாரணைகளுக்காக பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மூன்றாமவரான ஐசக் பெச்சாரா (Isaac Bechara) என்பவர் மீது, கடுமையான குற்றச் செயலை மறைக்க முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அவருக்குப் பிணை மறுக்கப்பட்டதுடன், வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது 43 வயதுடைய பெண் ஒருவரும் அங்கு இருந்த நிலையில், ஐந்தாவது நபர் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் (Organised crime) தொடர்புடையது அல்ல என பொலிஸார் ஆரம்பத்தில் உறுதியளித்த போதிலும், அங்கு இருந்த நபர்களுக்குக் குற்றவியல் பின்னணி உள்ளதா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்பு குறித்து செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துடன் பொலிஸார் முன்பும் தொடர்பு கொண்டிருந்ததாகக் காவல் துறை அத்தியட்சகர் நவோமி மூர் (Superintendent Naomi Moore) தெரிவித்தார்.
"துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் குடியிருப்பிற்குள் இருந்த பல நபர்கள் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாருக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள். அவர்களுக்குத் திட்டமிடப்பட்ட குற்றவியல் குழுக்களுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், அங்கு இருந்த சிலர் விசாரணை அதிகாரிகளுக்கு "ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகத்" தெரிவித்த அவர், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கைப்பற்றப்படவில்லை என்றும் வெளிப்படுத்தினார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் உள்ள பூங்கா மற்றும் ஓடைகளில் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகக் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவம் குறித்துச் செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்த மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் (Premier Chris Minns), இது "மிகவும் வேதனையளிக்கும் ஒரு சம்பவம்" என வருத்தம் தெரிவித்துள்ளார்.