Perth புறநகர்ப் பகுதியிலுள்ள புதர் நிலத்திற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த 37 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெர்த் நகர மையத்தில் (CBD) இருந்து தென்மேற்கே சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'ஹேமில்டன் ஹில்' பகுதியின் கார்டா வே மற்றும் யோங்கா சாலை சந்திப்பிற்கு அருகில், கடந்த செப்டம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இந்த திட்டமிட்டத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கிடந்த அந்த நபரை மீட்ட அப்பகுதிவாசி ஒருவர், ஆம்புலன்ஸ் வரும் வரை அவருக்கு முதலுதவி அளித்து உதவியுள்ளார். இதற்கிடையே, குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களைப் பூட்டி பாதுகாப்பாக இருக்குமாறு ஆரம்பத்தில் காவல்துறையினர் அறிவுறுத்தினர். இருப்பினும், பின்னர் இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனக் தெளிவுபடுத்தினர்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமடைந்த நபர், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, ஓ’கானர் பகுதியைச் சேர்ந்த 47 வயது நபர், அவெலி பகுதியைச் சேர்ந்த 39 வயது நபர், சக்ஸஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் மற்றும் ஹேமில்டன் ஹில்லைச் சேர்ந்த 49 வயது பெண் ஆகிய நால்வர் மீது 'சட்டவிரோதமாகக் கொலை செய்ய முயன்றதாக' வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களது பிணை கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று 'ஃப்ரீமேன்டில்' மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.