பிரிஸ்பேனில் இன்று காலை பணிக்குச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், குற்றவாளியை விரட்டிச் சென்று 'டேசர்' (Taser) துப்பாக்கியால் சுட்டு முடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் பணியில் சேர்ந்து 10 வாரங்களே ஆன அந்த அதிகாரி தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரிஸ்பேனின் கிழக்குப் பகுதியிலுள்ள ஹெம்மன்ட் (Hemmant) போகொங் தெருவில் (Bogong Street) அமைந்துள்ள ஒரு வீட்டில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முன்பாகக் குடும்பத் தகராறு நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் இரு காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்குத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த நபர்களில் ஒருவர், ஆயுதம் ஒன்றைக் கொண்டு கான்ஸ்டபிள் தரத்தையுடைய அதிகாரி மீது திடீர் தாக்குதல் நடத்தினார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குயின்ஸ்லேந்து காவல் சங்கத் தலைவர் ஷேன் பிரையர் (Shane Prior) கூறுகையில், "தாக்குதல் நடத்திய நபர் தனது உடம்பில் மறைத்து வைத்திருந்த ஏதோ ஓர் ஆயுதத்தை எடுத்து, ஒரு அதிகாரியின் கழுத்து மற்றும் மேல் உடற்பகுதியில் குத்தியுள்ளார். அவருடன் வந்த மற்றொரு அதிகாரியின் முன்கையிலும் வெட்டு விழுந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இரு அதிகாரிகளின் செயல்களையும், குறிப்பாகக் காயமடைந்த அதிகாரியின் தைரியத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். "இந்த அதிகாரி ஒரு உண்மையான வீரன்" என்று பிரையர் புகழாரம் சூட்டினார்.
"இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கத் தனது கழுத்தைப் பிடித்துக்கொண்டே, அவர் அந்த குற்றவாளியைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்று டேசர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிகப்படியான இரத்தப்போக்கினால் சோர்வடைந்ததால் மட்டுமே அவரால் மேற்கொண்டு நகர முடியாமல் போனது. அவர் ஒரு நிஜ வீரன்; அவருடைய சக அதிகாரியும் ஒரு வீரர்தான்" என்று அவர் மேலும் கூறினார்.
காயமடைந்த 40 வயதுடைய அந்த ஆண் அதிகாரியைக் குயின்ஸ்லேந்து அவசர ஆம்புலன்ஸ் படையினர் ஆபத்தான நிலையில் பிரின்சஸ் அலெக்ஸாண்டிரா (Princess Alexandra) மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தாக்குதலுக்குள்ளான அதிகாரி கடந்த ஜூலை மாதமே பயிற்சியை முடித்து வெளியேறியவர் என்றும், பணிக்கு வந்து சுமார் 10 வாரங்களே ஆகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான அவருக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.