பிராந்தியத்தில் இம்மாத தொடக்கத்தில் தனது கணவரால் மார்பில் குத்தப்பட்டதாக பொலிஸாரால் சந்தேகிக்கப்படும் 47 வயதுடைய பெண், சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி, இப் பெண்ணின் 39 வயதுடைய கணவர், குறித்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, முந்தைய நாள் இரவு சுமார் 8:00 மணியளவில் அவரை பால்மர்ஸ்டன் பிராந்திய வைத்தியசாலையில் (Palmerston Regional Hospital) அனுமதித்ததாக வடக்கத்திய பிராந்திய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
"மருத்துவ ஊழியர்களின் பரிசோதனையின் போது, அப் பெண்ணின் மார்பில் இரண்டு கத்திக்குத்து காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் ராயல் டார்வின் வைத்தியசாலைக்கு (Royal Darwin Hospital) மாற்றப்பட்டார்" என்று பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் அன்றைய தினமே கைது செய்யப்பட்ட அவரது கணவர் மீது, தீவிர காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சையிலிருந்த பெண் உயிரிழந்துவிட்டதை பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் (Department of Public Prosecutions) பொலிஸார் ஆலோசித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் திகதி டார்வின் உள்ளூர் நீதிமன்றத்தில் (Darwin Local Court) மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.