ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவக் கஞ்சா உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான 'டாஸ்மேனியன் பொட்டானிக்ஸ்' (Tasmanian Botanics), தற்போது 'யோங்ஜி ஹெல்த்' (Yongji Health) என்ற சீன நிறுவனத்தின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் சென்றுள்ளது.
நிறுவன ஆவணங்களின்படி, 'டாஸ்மேனியன் பொட்டானிக்ஸ்' நிறுவனத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ள 'பைஜென்' (Pijen) நிறுவனத்தின் முழு உரிமையையும், கூய்ஷூவை (Guizhou) தளமாகக் கொண்ட நிறுவனத்தின் துணை நிறுவனமான யோங்ஜி கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே பைஜென் நிறுவனத்தின் பகுதி பங்குகளை வைத்திருந்த யோங்ஜி, ஆஸ்திரேலியப் பங்குதாரர்களிடமிருந்த மீதமுள்ள பங்குகளை சுமார் 31 மில்லியன் டாலர் மதிப்பில் வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
தெற்கு டாஸ்மேனியாவில் உள்ள பாண்ட்வில் பகுதியில் அமைந்துள்ள பண்ணை மற்றும் பதப்படுத்தும் மையத்தில், மருத்துவக் கஞ்சா தயாரிப்புகளை டாஸ்மேனியன் பொட்டானிக்ஸ் பயிரிட்டு, உற்பத்தி செய்து, பேக்கேஜிங் செய்து வருகிறது.
வெளிநாட்டு முதலீடு "அச்சமளிப்பதாகத் தோன்றினாலும்", ஊழியர்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ எந்தவித பெரிய மாற்றங்களும் இருக்காது என்று டாஸ்மேனியன் பொட்டானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரேக் நைட் (Craig Knight) தெரிவித்துள்ளார்.
150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் பாண்ட்வில் மையத்தில், பசுமைக்குடில் (greenhouse), சுமார் 2.5 ஹெக்டேர் பரப்பளவிலான வெளிக்களச் சாகுபடி, மற்றும் உற்பத்தி-பேக்கேஜிங் வசதிகள் உள்ளன.
தாய்லாந்து போன்ற வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் கடுமையான போட்டியை ஆஸ்திரேலிய மருத்துவக் கஞ்சா துறை எதிர்கொண்டு வரும் சூழலில் இந்த உரிமையைக் கைப்பற்றும் நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
யோங்ஜி நிறுவனத்தின் இந்த "மிகப்பரிய முதலீடு", ஆஸ்திரேலிய மருத்துவக் கஞ்சா துறையின் மீது அந்நிறுவனத்திற்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்று கிரேக் நைட் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு உரிமை குறித்து சிலருக்குக் கவலைகள் இருந்தாலும், அது வணிக உலகின் இயல்பான நிதர்சனங்களில் ஒன்று என்று அவர் கூறினார்.
யோங்ஜி நிறுவனம், ஷாங்காய் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சிகரெட் பேக்கேஜிங் நிறுவனமான 'கூய்ஷூ யோங்ஜி பிரிண்டிங்' நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.