பல்லின கலாச்சார விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபரல் கட்சி கவுன்சிலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்த அதேநாளில், பாரமட்டா நகர சபையின் (Parramatta City Council) மிக இளைய மேயராக லேபர் கட்சியின் (Labor) கெமரூன் மெக்லீன் (Cameron Maclean) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தேர்தலில் 28 வயதான லேபர் கட்சி கவுன்சிலர் கெமரூன் மெக்லீன் வெற்றி பெற்றார்.
திங்கள்கிழமை காலையில் லிபரல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த கவுன்சிலர் டான்யா ரபுல் (Tanya Raffoul) அளித்த தீர்மானமிக்க வாக்கின் மூலம் இந்த வெற்றி சாத்தியமானது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் கெமரூன் மெக்லீன் ABC Sydney வானொலிக்கு அளித்த பேட்டியில், கவுன்சிலர் ரபுலுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
"லிபரல் கட்சி தவறான பாதையில் செல்வதாக அவர் உண்மையிலேயே நம்புகிறார். ஆனால், அவரது முடிவைப்பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. அவரது ஆதரவுக்கும் தைரியத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகி இதுபோன்ற ஒரு முடிவை எடுப்பது மிக முக்கியமானது. ஆனால், எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை" என்று அவர் கூறினார்.
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கவுன்சிலர் ரஃபுல், "குறிப்பாக மேற்கு சிட்னி பகுதியில் உள்ள பல்லின கலாச்சார ஆஸ்திரேலியர்களை ஒதுக்கி வைக்கும் வகையிலும், பிரிவினையைத் தூண்டும் ஒரு கட்சியுடன் லிபரல் கட்சி கொள்கை ரீதியாக இணைந்து செயல்படுவதும் ஏமாற்றமளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மேற்கு சிட்னியில் உள்ள பல்லின கலாச்சார சமூகங்கள் நமது மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். என்னைப் போன்ற பெருமைமிக்க ஆஸ்திரேலியர்களைக் கொண்ட இச்சமூகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவும், மதிக்கப்படவும் தகுதியானவர்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.
தான் கவுன்சிலர் பதவியிலிருந்து விலகவில்லை என்றும், டண்டாஸ் (Dundas) வார்டின் கவுன்சிலராகத் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் ரபுல் தெளிவுபடுத்தியுள்ளார்.
2021-இல் முதன்முறையாக கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கெமரூன் மெக்லீன், 2024 முதல் மேயராகப் பதவி வகித்த மார்ட்டின் சைட்டருக்குப் (Martin Zaiter) பதிலாக இப்பதவியை ஏற்கிறார்.
அதே கூட்டத்தில், சுயேச்சை கவுன்சிலரான (Kellie Darley) துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரமட்டா ஈல்ஸ் (Parramatta Eels) அணியுடனான மில்லியன் டாலர் கூட்டாண்மை குறித்த விமர்சனங்களை வெளியிட்டதற்காக நகர சபை இவர் மீது எடுத்த நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு இவர் இப்பதவிக்கு வந்துள்ளார்.