கிரீன்ஸ் கட்சியின் புதிய தலைவராக நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலச் செனட்டரான ஷூபிரிட்ஜ் (David Shoebridge) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாகத் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் அறிவித்த மறுநாளே, புதன்கிழமை சிட்னியில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் புதிய தலைவர் தொடர்பான அறிவிப்பை கிரீன்ஸ் கட்சி விடுத்தது.
விக்டோரியாவைச் சேர்ந்த ஸ்டெப் ஹாட்ஜின்ஸ்-மேயுடன் இணைந்து போட்டியிட்ட ஷூபிரிட்ஜ், தெற்கு ஆஸ்திரேலிய செனட்டர் சாரா ஹேன்சன்-யங் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் செனட்டர் மெஹ்ரீன் பரூக்கி ஆகியோரைத் தோற்கடித்தார்.
2022-இல் பெடரல் அரசியலில் நுழைவதற்கு முன்னர், ஷூபிரிட்ஜ் 12 ஆண்டுகள் நியூ சவுத் வேல்ஸ் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் தலைவர் ஆடம் பேண்ட் மெல்போர்ன் தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் முதல் வாட்டர்ஸ் கட்சியின் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
இருப்பினும், தனது தீவிர சிறுநீரகக் கோளாறு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் பின்னடைவைத் தொடர்ந்து, தலைவரிலிருந்து விலகுவதாகவும் நாடாளுமன்றப் பணிகளிலிருந்து தற்காலிக விடுப்பு எடுப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இந்நிலையிலேயே புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஒருமித்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இயலாத நிலையில், கட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக நடைபெற்ற தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பில் ஷூபிரிட்ஜ் வெற்றி பெற்றார்.