பயிர்களை விரைவாக அழிக்கும் திறன் கொண்ட அரிய வகை தாவர நோய்க்கிருமி ஒன்று ஆஸ்திரேலியாவில் முதன் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
(Monosporascus cannonballus) எனும் இந்த மண்ணில் வாழும் பூஞ்சை, தாவரங்களின் வேரழுகல் நோயை (root rot) ஏற்படுத்துகிறது என்று வடக்கு ஆஸ்திரேலிய பிராந்தியத்தின் தலைமைத் தாவர சுகாதார அதிகாரி சேலி ஹீட்டன் (Sally Heaton) தெரிவித்துள்ளார்.
டார்வின் (Darwin) பிராந்தியத்திலுள்ள வெள்ளரிப் பயிரிலும், அதற்கு தெற்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கேத்தரின் (Katherine) பிராந்தியத்திலுள்ள முலாம்பழப் பயிர்களிலும் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.
பூசணி, சுரைக்காய், வெள்ளரி மற்றும் பல்வேறு வகையான முலாம்பழங்கள் உள்ளிட்ட கொடி வகை பயிர்களில் வெளிநாடுகளில் இந்தப் பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளதாக ஹீட்டன் கூறினார். "இதைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், நன்கு வளர்ந்த முழுப் பயிர்களும் திடீரென மடிந்துவிடும் ஆபத்து உள்ளது" என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்தப் பூஞ்சை நோய் எவ்வாறு ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இது நீண்டகாலமாக இங்கு இருந்திருக்கக் கூடும் என்றும் அம்மாநில வேளாண் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இரு வேறு விவசாயிகள் தங்கள் பயிர்களில் பாதிப்பைக் கண்டறிந்த பின்னரே இது அடையாளம் காணப்பட்டது.
இந்த பூஞ்சையை நாட்டில் இருந்து முற்றிலுமாக அழிக்க முடியாது என்று கூறிய ஹீட்டன், "நாங்கள் பாதிக்கப்பட்ட தாவரங்களின் மெல்லிய வேர்களை ஆய்வு செய்தபோதே இந்த ஆபத்தான பூஞ்சையைக் கண்டறிந்தோம்" என்று தெரிவித்தார்.
அமெரிக்கா, இந்தியா, தைவான், ஜப்பான் மற்றும் ஐரோப்பா, மத்திய கிழக்கின் சில பகுதிகளில் இந்த நோய்க்கிருமி ஏற்கனவே பரவியுள்ளது. தாவரங்களின் வேர்களிலிருந்து பீரங்கிக் குண்டுகள் (cannonballs) வெடித்துப் புறப்படுவது போன்ற தோற்றத்தை இந்நோய் உருவாக்குவதாக அவர் விவரித்தார்.
இந்தக் கண்டுபிடிப்பு பெரும் கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் 'மெலன்ஸ் ஆஸ்திரேலியா' (Melons Australia) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஜொனாதன் டேவி (Johnathon Davey) தெரிவித்துள்ளார். "இந்தப் பூஞ்சை எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, அதைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்" என்று அவர் கூறினார்.
ஏற்கனவே வராரோ பூச்சி (varroa mite) உள்ளிட்ட பிற சவால்களால் விவசாயிகள் சிரமப்பட்டு வரும் சூழலில், இந்த நோயின் வருகை உற்பத்திச் செலவை மேலும் உயர்த்தும் என்றும், இதன் காரணமாக நுகர்வோருக்கான பழங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் டேவி கவலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்நோய் நாட்டிற்குள் பரவிய விதம் குறித்துப் விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடைகள் எதுவும் விதிக்கப்படாது
இந்த நோய்க்கிருமி கண்டறியப்பட்ட போதிலும், உடனடியாக உயிர் பாதுகாப்புத் தடைகள் (biosecurity restrictions) எதையும் விதிக்க வடக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் திட்டமிடவில்லை. இருப்பினும், விவசாயிகள் தங்களின் சொந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஹீட்டன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் ஏற்கனவே உயிரியல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால், அவர்களின் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளே இந்நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.