ஆஸ்திரேலியாவின் நியூகாசில் நைட்ஸ் (Newcastle Knights) ரக்பி விளையாட்டு அணியின் ஆதரவாளர்கள் கூட்டத்திற்குள் காரை மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், 18 வயதான இந்திக பாம்ப்ரிக் சமரசிங்க (Indika Bambrick Samarasinghe) என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி படுகாயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர் நாளை நியூகாசில் நீதிமன்றத்தில் (Newcastle Bail Court) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இன்று (3) காலை 9.30 மணியளவில், நியூகாசிலின் வால்சென்ட் (Wallsend) பகுதியில் உள்ள வட்டாரச் சாலையில் கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று புகுந்தது.
இந்த விபத்தில் 5 வயது சிறுமி உட்பட 10 பேர் காயமடைந்து ஜான் ஹன்டர் வைத்தியசாலையில் (John Hunter Hospital) அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், காயமடைந்த 67 வயது முதியவரின் நிலைமை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (04) நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்குச் செல்லும் நியூகாசில் நைட்ஸ் வீரர்களை வழிஅனுப்பி வைப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தபோதே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, வீரர்கள் பயணித்த பேருந்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சமரசிங்கவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்து கூச்சலிட்டனர். மேலும், காரில் இருந்த மற்ற இருவரையும் கோபமடைந்த கூட்டத்தினரிடமிருந்து அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர்.
சம்பவம் குறித்துத் தெரிவித்த மாநிலக் காவல் துறை அமைச்சர் யாஸ்மின் கேட்லி, "இது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய துயரச் சம்பவம்" எனக் கவலை தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நியூகாசில் நைட்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் பார் மற்றும் தலைவர் காலின் பொங்கா ஆகியோர், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்களது ஆதரவை தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், விரைவாகச் செயல்பட்டு உதவிகளை வழங்கிய முதலுதவிப் பணியாளர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.