நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை நீட்டியதாகக் கூறப்படும் நபர் ஒருவர், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
யஸ் (Yass) நகருக்கு வடக்கே சுமார் 84 கி.மீ தொலைவில் உள்ள ரக்பி (Rugby) பகுதிக்கு அருகில் உள்ள சாலையில், கார் ஒன்று மரத்தில் மோதியதாகக் கிடைத்த தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நியூ சவுத் வேல்ஸ் காவல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் சாய்ஸ்லர் (Chrysler) ரக ஸ்டேஷன் வேகன் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். முன் இருக்கையில் இருந்த ஓட்டுநர் சுயநினைவின்றிக் காணப்பட்டுள்ளார்.
"காவல்துறையினர் அந்த நபரை அணுகி முதலுதவி அளிக்க முயன்றனர். அப்போது, அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி அதிகாரிகளை நோக்கி சுட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் காவல்துறையினரால் சுடப்பட்டார்" என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அந்த ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவருக்கு 45 வயது இருக்கும் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சம்பவ இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், மாநில குற்றப்பிரிவு கொலைக் விசாரணைப் பிரிவின் முக்கிய சம்பவக் குழு மூலம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த விசாரணை குறித்து தொழில்முறை தரநிலைகள் ஆணையம் (Professional Standards Command) சார்பாக சுயாதீன மறுஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வு சட்ட அமலாக்க நடத்தை ஆணையத்தால் (Law Enforcement Conduct Commission) கண்காணிக்கப்படும்.
நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் துறை உதவி ஆணையர் ஸ்டீபன் ஹெகார்ட்டி (Stephen Hegarty) திங்கள்கிழமை பிற்பகுதியில் இதுகுறித்த கூடுதல் விவரங்களை வழங்குவார்.