ஆன்லைன் கேமிங் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஆஸ்திரேலிய சிறுவர்களை இலக்காகக் கொண்டு, அவர்களைச் சுய தீங்கு (self-harm), வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்தும் '764' உள்ளிட்ட ஆபத்தான ஆன்லைன் கும்பல்கள் (Sadistic Online Exploitation Networks) அதிகரித்து வருவது குறித்து ஆஸ்திரேலியக் காவல்துறை மற்றும் சட்ட அமுலாக்க முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆன்லைன் கேமிங் தளங்கள், மெசேஜிங் ஆப்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக 8 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் இக்குழுக்கள், முதலில் நண்பர்களைப் போலவும் அல்லது காதலைப் போலவும் நடித்து நம்பிக்கையைச் சம்பாதிக்கின்றன.
குழந்தைகளின் தனியுரிமைப் படங்கள் அல்லது தகவல்களைப் பெற்ற பிறகு, அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி (sextortion), அவர்களை மேலும் வன்முறையான செயல்கள், சுய தீங்கு விளைவித்துக் கொள்ளுதல் மற்றும் விலங்குகளைத் துன்புறுத்துதல் போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துகின்றன.
சர்வதேச அளவில் இயங்கும் '764' போன்ற நெட்வொர்க்குகள், அராஜகவாத மற்றும் தீவிரவாதக் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, குழந்தைகளை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்வதையே ஒரு விளையாட்டாகவும் தங்களது செல்வாக்கை உயர்த்தும் வழியாகவும் கொண்டுள்ளன.
குழந்தைகள் திடீரென தனிமைப்படுதல், தோலில் காயங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல், இரகசியமாக இணையத்தைப் பயன்படுத்துதல் போன்ற மாற்றங்களைக் காட்டினால் பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு ஆஸ்திரேலியக் குழந்தைகள் சுரண்டல் எதிர்ப்பு மையம் (ACCCE) அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய மிரட்டல்களுக்குப் பணியாமல் உடனடியாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.