குவீன்ஸ்லாந்தின் Fraser Coast அருகே நேற்று பிற்பகல் சிறிய தடுப்பணை ஒன்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணும் சிறுமியும் உயிரிழந்தனர்.
மேரிபரோ (Maryborough) நகருக்குத் தெற்கே உள்ள டினானா சவுத் (Tinana South) பகுதி, ஸ்பிரிங்வேல் சாலையில் (Springvale Road) மாலை 5:30 மணிக்கு இச்சம்பவம் குறித்து அவசரக்கால மீட்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கார் நீருக்கடியில் மூழ்கியிருந்த நிலையில், அதிலிருந்த 36 வயதுப் பெண்ணும் 10 வயதுச் சிறுமியும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்த பெண் டினானா சவுத் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
ஜோயல் ஹின்ஷென் (Joel Hinschen, 45) என்பவரது நிலத்தில் அமைந்துள்ள தடுப்பணையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
"நான் உடனடியாக நீரில் இறங்கி இருவரையும் காரில் இருந்து வெளியே மீட்டேன்.
அதன்பின்னர், அவசரக்கால மீட்புக் குழுவினர் வரும் வரை, தனது தந்தை அந்தச் சிறுமிக்கு முதலுதவி (CPR) அளித்து உயிர்ப்பிக்க முயன்றதாக " ஹின்ஷென் கூறினார்.
தடுப்பணையில் நீர் ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்திலேயே இருந்ததுடன், காரின் பின்புறச் சக்கரங்கள் வெளியில் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்தோ அல்லது விபத்துக்குள்ளான வாகனம் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.