ஆஸ்திரேலியப் பொறியியலாளர் ராபர்ட் பெத்தர் (Robert Pether) கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
51 வயதான பெத்தர் மற்றும் அவரது எகிப்திய சக ஊழியர் ஆகியோர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே பெத்தர் தான் நிரபராதி என்றே கூறிவந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசத்திற்குப் பிறகு, 2025 ஜூன் மாதம் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் ஈராக்கை விட்டு வெளியேற முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில், பெத்தர் பாக்தாத் நகரிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், அயர்லாந்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைய அவர் தற்போது சுதந்திரமாக உள்ளார் என்றும் செனட்டர் வோங் தெரிவித்துள்ளார்.
அவர் ஈராக்கிலிருந்து புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, திங்கள்கிழமை காலையில் அவருடன் உரையாடியதாக பென்னி வோங் கூறினார்.
"அவர் விடுவிக்கப்பட்டது எங்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது என்றும், அவர் தனது உடல்நலனை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நான் அவரிடம் தெரிவித்தேன். முக்கியமாக, அவர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கும், அவரது எதிர்கால நல்வாழ்விற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், "இந்தச் சம்பவம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன்" என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஆண்டு, பெத்தரின் மனைவியான டெஸ்ரீ, தனது கணவரின் உடல் மற்றும் மனநல நிலை குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.