உலகின் மிகவும் ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்களில் ஒன்றான நெருப்பு எறும்புகள் (Fire ants), சிட்னியின் Inner-west பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
என்பீல்ட் இன்டர்மோடல் லொஜிஸ்டிக்ஸ் சென்டரில் (Enfield Intermodal Logistics Centre) இந்த நெருப்பு எறும்புகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை கப்பல் கொள்கலன் (Shipping container) மூலம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிட்னியில் கண்டறியப்பட்டுள்ள இந்த எறும்புகள், தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் ஏற்கனவே பரவியுள்ள எறும்புப் பிரிவுகளுடன் தொடர்புடையவை அல்ல என (Invasive Species Council - ISC தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு முறைமை (Biosecurity system) திறம்படச் செயல்பட்டு வருவதையே இக்கண்டுபிடிப்பு உணர்த்துவதாகக் கவுன்சிலின் பிரச்சார இயக்குனர் ரீஸ் பியாண்டா (Reece Pianta) தெரிவித்துள்ளார்.
"எல்லைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நாம் ஏன் தொடர்ந்து அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையிலேயே இக்கண்டுபிடிப்பு அமைந்துள்ளது" என்று ரீஸ் பியாண்டா கூறினார்.
"ஆஸ்திரேலியாவின் பல வர்த்தகப் பங்களிப்பு நாடுகளில் நெருப்பு எறும்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. எனவே, புதிய ஆக்கிரமிப்புகளை விரைவாகக் கண்டறிவது, அவை நிலைபெறுவதைத் தடுப்பதற்கு மிக முக்கியமானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய ஊடுருவலை ஒரு பெரிய பாதிப்பாக மாறாமல் அதிகாரிகள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற முழு நம்பிக்கை கவுன்சிலுக்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.