சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்மீதான டிரம்பின் நிர்வாகத்தின் புதிய தடைகளுக்கு ஆஸ்திரேலியா கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பை முடக்கும் வகையில் அமெரிக்கா விதித்துள்ள கடுமையான தடைகளுக்கு ஆஸ்திரேலியாவின் தாமதித்த எதிர்வினை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
"சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திரம், நடுநிலைமை மற்றும் நேர்மைக்கு தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை" மீண்டும் உறுதிப்படுத்தி ஜப்பான், கனடா, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை இரவு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அமெரிக்கச் சொத்துக்களை முடக்கியும், அமெரிக்க நிறுவனங்களுடன் அது தொடர்பு கொள்வதைத் தடைசெய்தும் புதிய தடைகளை அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த அறிக்கை வெளியானது.
"சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்ற முறையில், அமெரிக்காவினால் நீதிமன்றத்தின் மீது விதிக்கப்படவுள்ள தடைகள் குறித்த அறிவிப்பு குறித்து நாங்கள் வருந்துவதுடன், அதை கடுமையாக மறுக்கிறோம்," என்று அந்நாடுகள் தெரிவித்தன.
ஆஸ்திரேலிய நேரப்படி சனிக்கிழமை காலை இந்த அறிக்கை முதன்முதலில் வெளியிடப்பட்டபோது ஆஸ்திரேலியாவின் பெயர் அதில் இடம்பெறவில்லை.
அரசின் இந்த ஆரம்பகட்ட மௌனம் சட்ட நிபுணர்களிடமிருந்து பலத்த விமர்சனங்களை ஈர்த்ததுடன், அவர்கள் அரசை கோழைத்தனம் என்று குற்றம் சாட்டினர்.
இருப்பினும், திங்கள்கிழமை இரவு, கூட்டறிக்கையில் உள்ள நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பெயர் சேர்க்கப்பட்டு, வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் (DFAT) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.
கூட்டறிக்கை முதன்முதலில் வெளியிடப்பட்ட பின்னரே அதில் இணையுமாறு ஆஸ்திரேலியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதில் தனது பெயரைச் சேர்க்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமையன்று நெதர்லாந்திடம் சுட்டிக்காட்டியதாகவும் கூட்டாட்சி அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடொன்றின் அதிகாரி ஒருவர் இந்த விளக்கத்தை உறுதிப்படுத்தியதுடன், வார இறுதியில் கண்டங்களுக்கு இடையே நிலையை ஒருங்கிணைக்க நேரம் எடுத்ததாகக் கூறி ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை நியாயப்படுத்தினார்.
மற்றொரு மேலைநாட்டின் அதிகாரியும், ஆஸ்திரேலியா அறிக்கையில் இணைய "தயங்கியதாக" தாம் நம்பவில்லை என்றும், இந்த நடைமுறைக்கு "நேரம் எடுத்தது" என்றும் கூறினார்.
ஆனால், பிற அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆஸ்திரேலிய அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பாதுகாப்பதில் மிகவும் "கவனமான" மற்றும் "வெளிப்படையற்ற" அணுகுமுறையையே இன்னமும் கையாண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தடைகளைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சிக்கும் (Sanae Takaichi), இது தொடர்பாக எவ்வித தனிப்பட்ட அறிக்கைகளையும் வெளியிடாத ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் ஆகியோருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தத் தடைகள் குறித்து கன்பராவில் (Canberra) ஆழ்ந்த கவலை நிலவியபோதிலும், குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான இந்த பிரச்சாரத்தை அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ முன்னெடுத்து வருவதால், இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்துடன் மோதலில் ஈடுபட ஆஸ்திரேலியா தயங்கியதாக அதிகாரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தனர்.