குடிவரவுத் தடுப்பு முகாம்களில் கடந்த நிதியாண்டில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 பேரில் ஆஸ்திரேலிய பிரஜையொருவரும் அடங்குவார் என்பது காமன்வெல்த் குறை தீர்ப்பாளரின் (Ombudsman) அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
'Mx B' என பெயரிடப்பட்டுள்ள அந்த நபர், ஆஸ்திரேலியக் குடியுரிமைச் சட்டங்களை உள்துறை அமைச்சகம் தவறாகப் புரிந்துகொண்டதன் காரணமாக 945 நாட்கள் (இரண்டரை ஆண்டுகள்) சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
1989-இல் நியூசிலாந்து தம்பதியருக்கு ஆஸ்திரேலியாவில் பிறந்த 'Mx B', சில காலம் வெளிநாடு சென்று மீண்டும் 1992-இல் ஆஸ்திரேலியா திரும்பினார்.
குடியுரிமைச் சட்டத்தின்படி, தனது 10-வது பிறந்தநாளில் அவருக்குத் தானாகவே குடியுரிமை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், துறை சார்ந்த "முறையற்ற ஆவணப் பராமரிப்பு" காரணமாக இது நிகழவில்லை.
நான்கு தசாப்தங்களாகத் துறையில் நிலவிய தவறுகள், தவறான அனுமானங்கள் மற்றும் பரிசோதனைத் தோல்விகள் குறித்து அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வளர்ந்த Mx B, குற்றச் செயல்களுக்காக 2010-ஆம் ஆண்டில் தனது 21-வது வயதில் சிறைத்தண்டனை பெற்றார். 2018-இல் அவர் சிறையில் இருந்தபோது, உள்துறை அமைச்சகம் அவரது குடியுரிமை குறித்து ஆய்வு செய்து, குழந்தைப் பருவத்தில் அவர் ஆஸ்திரேலியாவை விட்டு சிறிது காலம் வெளியேறியதைச் சுட்டிக்காட்டி, அவர் ஆஸ்திரேலியக் குடிமகன் அல்ல என்று தவறாகத் தீர்மானித்தது.
"வாழ்க்கையின் முதல் 10 ஆண்டுகளில் அவர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கவில்லை எனக் கணக்கிடப்பட்டது. வெளிநாடுகளுக்கான குறுகிய காலப் பயணங்கள் தொடர்பான வழக்குகளின் சட்ட முன்னுதாரணங்களை அதிகாரிகள் பரிசீலிக்கத் தவறிவிட்டனர்" என்று குறைதீர்ப்பாளர் அறிக்கை தெரிவிக்கிறது.
2019-இல், Mx B நியூசிலாந்து குடிமகன் என்ற தவறான புரிதலில் அவரது விசா நிலையைத் ரத்து செய்ய அமைச்சு முயன்றது. 2022-இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், துறை அவரை நேரடியாகக் குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பியது.
தான் ஒரு ஆஸ்திரேலியக் குடிமகன் என தடுப்புக் காவலில் இருந்தபோது பலமுறை Mx B முறையிட்டார். 2024-இல் அவரது வழக்கறிஞர் வழங்கிய புதிய ஆதாரங்களையும் நிராகரித்த உள்துறை அமைச்சகம், மூன்றாவது முறையாகவும் அவர் குடிமகன் அல்ல என்றே அறிவித்தது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பும் விடுதலையும்
நவம்பர் 2023-இல் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அளித்த 'NZYQ' தீர்ப்பில், நாடுகடத்த முடியாத நபர்களைக் காலவரையின்றித் தடுப்புக் காவலில் வைப்பது சட்டவிரோதமானது என அறிவித்தது. அதைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்ட போதிலும் Mx B விடுவிக்கப்படவில்லை.
இறுதியாக ஏப்ரல் 2025-இல், Mx B ஒரு நியூசிலாந்து குடிமகனே அல்ல என்று நியூசிலாந்து அரசு ஆஸ்திரேலியாவிடம் தெளிவுபடுத்திய பின்னரே, அவர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின்னரே மேற்கொள்ளப்பட்ட நான்காவது ஆய்வில், அவர் ஆஸ்திரேலியக் குடிமகன் என்பது அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
மற்றொரு நபரும் பாதிப்பு
ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரையிலான காலக்கட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 4,247 பேரில், 30 பேர் சட்டவிரோதமாகவே வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதில் 'Mx A' என்பவர் அதிகாரிகளின் சட்டப் புரிதலின்மை காரணமாக 304 நாட்கள் தவறாகச் சிறைவைக்கப்பட்டிருந்தார். அமைச்சரின் விசா ஒப்புதல் தகவல்கள் துறைக்கு வந்து சேர தாமதமானதால் மேலும் 18 பேர் ஒரு நாள் முழுவதும் சட்டவிரோதக் காவலில் இருந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட எவரும் அரசாங்கத்திடம் இதுவரை இழப்பீடு கோரவில்லை. இச்சம்பவங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களிடம் உள்துறை அமைச்சகம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், தனது கொள்கை நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் குறைதீர்ப்பாளர் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.