சிட்னி நகரின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நர்ரபீன் (Narrabeen) நடைபாதைகளில் பெண்களிடம் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொடர் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், விசாரணைக்கு தேவைப்படும் நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் 13 வயது சிறுவன் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சிட்னியின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள நர்ரபீன் வாவியைச் சுற்றிய நடைபாதைகளில், பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் இடம்பெற்றதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மின்சார மிதிவண்டியில் வந்த நபர் ஒருவர், நடைபயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்களை அணுகி, அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் இவ்வாறான மூன்று சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்போது ஒரு சம்பவத்தில், குறித்த நபர் பெண் ஒருவரிடம் தகாத பாலியல் கருத்துக்களையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஒக்டோபர் 1ஆம் திகதி வீலர் ஹைட்ஸ் பகுதியில் உள்ள சவுத் க்ரீக் வீதிக்கு அருகில் பெண் ஒருவர் இவ்வாறான அத்துமீறலுக்கு உள்ளானதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டோபர் 12ஆம் திகதி நர்ரபீன் வாவிக்கு அருகிலுள்ள பிலரோங் ரிசர்வ் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மேலும் இரு பெண்களும் அத்துமீறலுக்கு உள்ளானதாகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சிகளில் காணப்படும் நபர், வெள்ளையினத் தோற்றம் கொண்டவர் என்றும், 25 வயதுக்குக் குறைந்தவராக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் சுமார் 175
சென்டிமீற்றர் உயரமும் நடுத்தர உடல்வாகும் கொண்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள், சம்பவங்களை நேரில் கண்டவர்கள் அல்லது கையடக்கத் தொலைபேசி மற்றும் வாகனக் கமெரா பதிவுகளை வைத்திருப்பவர்கள் முன்வந்து தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.