விக்டோரியா மாநிலத்தில், உணர்வுத் தூண்டுதல்களால் அதிக சிரமத்தை எதிர்கொள்ளும் வாக்காளர்கள் அமைதியான சூழலில் வாக்களிப்பதற்கு வசதியாக, மாநிலம் முழுவதும் விசேட வாக்களிப்பு நிலையங்களை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம், நரம்பியல் வேறுபாடுகளைக் கொண்டவர்கள் மற்றும் ஒலி, வெளிச்சம் உள்ளிட்ட உணர்வுத் தூண்டுதல்களுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்கள், தேவையற்ற இடையூறுகள் இன்றி தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.
எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ள விக்டோரியா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் 88 கீழவைத் தேர்தல் தொகுதிகளிலும் தலா ஒரு குறைந்த உணர்வுத் தூண்டுதல் கொண்ட வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையங்கள் நவம்பர் 17ஆம் திகதி முதல் இயங்கத் தொடங்கும். ஏனைய முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே இவை செயல்பட ஆரம்பிக்கும்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் இந்த நிலையங்களில், பயிற்சி பெற்ற தேர்தல் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுவர். அமைதியான சூழலைப் பேணுதல், ஒலி மற்றும் வெளிச்சத்தால் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்தல், அனைவருக்கும் அணுகக்கூடிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
இந்த நிலையங்கள் அமைக்கப்படும் குறிப்பிட்ட இடங்கள் தொடர்பான விவரங்களை விக்டோரியா தேர்தல் ஆணைக்குழு (VEC) பின்னர் அறிவிக்கவுள்ளது.
முன்னோடித் திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பு
வாரண்டைட், பிரஹ்ரான், வெரிபீ மற்றும் நீபியன் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் போது, இத்தகைய வாக்களிப்பு நிலையங்கள் பரீட்சார்த்தமாகச் செயல்படுத்தப்பட்டன.
அவற்றின் அனுபவங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த சாதகமான கருத்துகளின் அடிப்படையில், திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் பரீட்சார்த்த நடவடிக்கை 2023ஆம் ஆண்டு வாரண்டைட் இடைத்தேர்தலின் போது முன்னெடுக்கப்பட்டது. அப்போது 321 வாக்காளர்கள் இவ்வசதியைப் பயன்படுத்தினர்.
பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இவ்வசதியைப் பயன்படுத்தியிருந்தாலும், நரம்பியல் வேறுபாடுகள் மற்றும் உணர்வுத் தூண்டுதல்களால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கென தனியான வாக்களிப்பு வசதிகள் அவசியம் என ஆய்வுகளும் தொடர்புடைய தரப்பினருடனான கலந்துரையாடல்களும் சுட்டிக்காட்டியதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்கூட்டிய வாக்களிப்பு அதிகரிப்பு
விக்டோரியா மாநிலத்தில் முன்கூட்டிய வாக்களிப்பு நடைமுறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், ஏறத்தாழ பாதி வாக்காளர்கள் தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே நேரில் வாக்களித்திருந்தனர்.
2026ஆம் ஆண்டு தேர்தலில், வாக்களிக்கத் தகுதியுடையவர்களில் 60 சதவீதம் வரையிலானோர் தேர்தல் தினத்திற்கு முன்னதாக நேரில் வாக்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது 2022ஆம் ஆண்டு தேர்தலின் போது திறக்கப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கையைவிட 30 சதவீதம் அதிகமாகும்.
காரணம் எதுவும் தெரிவிக்க வேண்டிய அவசியமின்றி, முன்கூட்டியே வாக்களிப்பது வசதியானதும் அணுகக்கூடியதுமான தெரிவாகும் என விக்டோரியா தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது