நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லீட்டன் நகரில், தமக்குத் தெரிந்த பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில், லீட்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது, 42 வயதுடைய குறித்த பெண்ணை அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் சமையலறைக் கத்தியால் பலமுறை தாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னரே சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், அருகிலிருந்த மற்றொரு வீட்டின் முன்புற வாயிலில் தனது வாகனத்தை மோதச் செலுத்திவிட்டு அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த பெண்ணுக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர மருத்துவ சேவையினர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர், லீட்டன்–நரண்டேரா விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் கான்பெரா வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில், சம்பவம் இடம்பெற்ற அதே நாளில் யான்கோ (Yanco) பகுதியில் உள்ள டெம்ப்ஸி வீதியில் சந்தேகநபர் மற்றொரு வாகனத்துடன் மோதியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகாவாகா பகுதியில் சந்தேகநபர் கைது
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, ரொட்னி ஜேம்ஸ் சார்ல்ஸ் டாட் (Rodney James Charles Tatt) என அடையாளம் காணப்பட்ட 38 வயது நபர், சனிக்கிழமை பிற்பகல் வாகாவாகா (Wagga Wagga) நகரின் ஆஷ்மொன்ட் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வாகாவாகா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அனுமதியின்றி ஒருவரைக் கழுத்தை நெரித்ததாகக் கூறப்படும் குற்றம், குடும்ப வன்முறையுடன் தொடர்புடைய கடுமையான காயத்தை ஏற்படுத்தும் நோக்கிலான தாக்குதல், சாதாரண தாக்குதல் மற்றும் யான்கோ பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வாகன விபத்துடன் தொடர்புடைய குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை காணொளி இணைப்பு மூலம் பிணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சட்ட உதவி சேவையின் ஊடாகப் பிணை கோருவதற்குப் பதிலாக, தனது சொந்த சட்டப் பிரதிநிதியுடன் ஆலோசிக்க விரும்புவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவர் பிணை கோரவில்லை; பிணையும் வழங்கப்படவில்லை.
குறித்த நபர் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி கிரிஃபித் உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.