ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் அரச கடன் சுமையைக் கட்டுப்படுத்தவும், எதிர்கால நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை (GST) அதிகரித்து, வருமான வரியைக் குறைக்கும் புதிய முன்மொழிவை கிராட்டன் நிறுவனம் (Grattan Institute) முன்வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 10 சதவீத GST அறவிடப்படுகிறது. இதனை 15 சதவீதமாக அதிகரிப்பதுடன், தற்போது வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கும் இந்த வரியை விரிவுபடுத்த வேண்டும் என அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 76 பில்லியன் ஆஸ்ஸ்திரேலிய டொலர் மேலதிக வருமானத்தை அரசாங்கத்தால் திரட்ட முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட வரி மாற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 58 பில்லியன் டொலரைப் பயன்படுத்தி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கான வருமான வரியைக் குறைக்கவும், சமூக நலன்புரிக் கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் கிராட்டன் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, வேலை தேடுவோருக்கான JobSeeker மற்றும் இளைஞர்களுக்கான Youth Allowance கொடுப்பனவுகளை 20 சதவீதத்தாலும், அரசாங்கத்தின் வாடகை உதவித்தொகையை 50 சதவீதத்தாலும், பெற்றோருக்கான கொடுப்பனவை 20 சதவீதத்தாலும் அதிகரிக்க வேண்டும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், ஓய்வூதியக் கொடுப்பனவுகளையும் சுமார் 8 சதவீதத்தால் அதிகரிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள வருமானத்தை மாநில அரசாங்கங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தவும், முத்திரைத் தீர்வை (Stamp Duty) போன்ற வரிகளைக் குறைக்கவும் பயன்படுத்தலாம் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
யாருக்கு நன்மை? யாருக்கு அதிக வரிச்சுமை?
இந்த முன்மொழிவின்படி, பெரும்பாலான குடும்பங்கள் சற்றே அதிக வரிச்சுமையை எதிர்கொள்ளக்கூடும். குறிப்பாக, அதிக வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் வயதானவர்களுக்கும் வரிச்சுமை அதிகரிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறைந்த வருமானம் பெறும், வாடகை வீட்டில் வசிக்கும் ஒற்றைப் பெற்றோர் குடும்பம் ஒன்றுக்கு வாரத்துக்கு சுமார் 150 டொலர் நிகர நிதி நன்மை கிடைக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, அதிக வருமானம் பெறும் ஒரு தொழிலாளர் குடும்பம் வாரத்துக்கு சுமார் 162 டொலர் மேலதிக வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும், இவை முன்மொழியப்பட்ட வரி மாற்றங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளே தவிர, நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அல்ல.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு பாதிப்பு ஏற்படுமா?
GST அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நீண்டகாலமாக முன்வைக்கப்படும் முக்கிய விமர்சனமாகும். ஏனெனில், குறைந்த வருமானம் பெறுவோர் தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை அத்தியாவசியப் பொருட்களுக்காகச் செலவிடுகின்றனர்.
அவுஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சிலும், GST அதிகரிப்பின் மூலம் வருமான வரியைக் குறைப்பது குறைந்த வருமானம் பெறுவோரிடமிருந்து வளங்களை அதிக வருமானம் பெறுவோருக்கு மாற்றும் அபாயம் இருப்பதாக முன்னர் எச்சரித்திருந்தது.
எனினும், e61–UNSW கொள்கை ஆய்வுக் கூட்டாண்மை மேற்கொண்ட அண்மைய ஆய்வொன்று, GST வரிச்சுமை குறித்த பொதுவான மதிப்பீடுகள் சிலவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நீண்டகாலச் செலவினங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில், குறைந்த மற்றும் அதிக செலவினம் கொண்ட குடும்பங்கள் தங்களது செலவினத்தில் ஏறத்தாழ ஒரே விகிதத்தில் GST செலுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தும் முன்மொழிவு
ஆஸ்திரேலியாவில் 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் GST அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் அடிப்படை விகிதம் அதிகரிக்கப்படவில்லை.
அரச கடன் அதிகரிப்பு, வயதான மக்களின் எண்ணிக்கை உயர்வு, சமூக சேவைகளுக்கான செலவினத் தேவை மற்றும் கடன் பெறுவதற்கான செலவு அதிகரிப்பு ஆகியவை எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நிதி அழுத்தத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என கிராட்டன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், GST அதிகரிப்பால் வாழ்க்கைச் செலவு மேலும் உயரக்கூடும் என்ற கவலை காரணமாக இந்த முன்மொழிவு அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் GST அதிகரிப்பு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்கு அரசியல் தரப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியுள்ளன.
வரி முறையில் இத்தகைய பெரிய மாற்றத்தை மேற்கொள்வது சவாலானதாக இருந்தாலும், தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீண்டகாலத் திட்டமிடல் அவசியம் என கிராட்டன் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.