ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் பிராந்தியப் பகுதியான வங்கரட்டாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
65 வயதான ஹெலன் ஹெய்ன்ஸ், திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு முன்னதாகத் தனது அலுவலகத்திற்கு வெளியே வைத்து காரினால் மோதப்பட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹெலன் ஹெய்ன்ஸ் தாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பிரதமர் அல்பனீஸ், சம்பவத்துக்கான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான கூட்டுக் குழு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் ஆணையாளர் கிறிஸி பாரெட்டிடம் இருந்து சம்பவம் தொடர்பான விளக்கத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“அவர் முழுமையாகக் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். அசாதாரணமான அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முதல்நிலை மீட்புப் பணியாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பிரதமர் கூறினார்.
மேலும், ஹெலன் ஹெய்ன்ஸை நேர்மையும் நற்பண்புகளும் கொண்டவராகவும், நாடாளுமன்றம் முழுவதிலும் மதிக்கப்படுபவராகவும் அவர் வர்ணித்தார்.
சம்பவ இடத்திலேயே சந்தேகநபர் கைது
விக்டோரியா பொலிஸாரின் தகவலின்படி, வெள்ளை நிற டொயோட்டா லேண்ட் குரூசர் ரக வாகனம் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது மோதியுள்ளதாக நம்பப்படுகிறது.
வாகனத்திலிருந்து இறங்கிய 43 வயதுடைய டாரவிங்கி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரைப் பொதுமக்களில் ஒருவர் பிடித்து வைத்ததைத் தொடர்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் இண்டி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஹெலன் ஹெய்ன்ஸ் மீதான இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.