ஆஸ்திரேலியாவின் இண்டி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸை வாகனத்தால் மோதியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தற்போது பொலிஸ் காவலில் உள்ளவர் 43 வயதுடைய பிரெண்டன் நுஜென்ட் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்ட தகவல்களை ஆராய்ந்தபோது, அவரது வாழ்க்கை மற்றும் கடந்தகாலம் தொடர்பான சில ஆரம்பகட்ட விபரங்கள் வெளியாகியுள்ளன.
நுஜென்ட் நீண்டகாலமாக இண்டி தேர்தல் தொகுதிப் பகுதியில் வசித்து வருபவர் எனத் தெரிகிறது. சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் தொடர்பாக அவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்துள்ளார்.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி, நுஜென்டின் எக்ஸ் (X) கணக்கில் வெளியிடப்பட்ட பதிவொன்றில், வெள்ளை நிற டொயோட்டா லேண்ட் குரூஸர் வாகனமொன்று காணப்படுகிறது. ஹெலன் ஹெய்ன்ஸை மோதியதாகப் பொலிஸார் சந்தேகிக்கும் அதே வாகனம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனம், ‘வீதி மூடப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்புப் பலகைக்குப் பின்னால், காட்டுப் பாதையொன்றில் நிறுத்தப்பட்டிருந்தது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக மறைக்கப்பட்டிருந்த அதன் பதிவு இலக்கம், சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட காணொளியில் உள்ள வாகனத்தின் பதிவு இலக்கத்துடன் பொருந்துவதாக தெரியவந்துள்ளது.
நுஜென்ட் வசிக்கும் பகுதிக்கு அருகில் வசிக்கும் ஒருவர், அவரது மனநல நிலை தொடர்பான கவலைகள் காரணமாக அப்பகுதி மக்கள் அடிக்கடி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
வாங்கரட்டா நகரிலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டார்ராவிங்கீ பகுதியில், நுஜென்ட் வசிப்பதாகக் கருதப்படும் வீட்டில் இன்று முன்னதாகப் பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
நுஜென்ட் மிக அதிக சத்தத்தில் இசையை ஒலிக்கச் செய்வதுடன், கூச்சலிடும் சத்தமும் அடிக்கடி கேட்பதாக அயலவர் குறிப்பிட்டுள்ளார். அவரைக் கண்டு அச்சமடைந்ததாகவும், அண்மையில் தமது குடும்பத்தினரிடம் அவர் தெளிவற்ற, புரிந்துகொள்ள முடியாத கருத்துகளை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
“அயலவர்கள் அனைவரும் அவருக்கு எதிராகப் பலமுறை பொலிஸாரை அழைத்துள்ளனர் என நான் நினைக்கிறேன். பொலிஸார் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். அவருக்கு மனநலப் பரிசோதனைகளை மேற்கொண்டு, அவருக்கு ஆதரவளிக்கும் மனநலக் குழுவுடன் தொடர்புகொள்ளுமாறு நான் கோரியிருந்தேன். அவர்கள் அவ்வாறு செய்திருப்பார்கள் என நம்புகிறேன்” என்று அயலவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நேற்றைய சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் காவலில் இருந்த நுஜென்டுக்கு மனநல மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஹெலன் ஹெய்ன்ஸுடன் சமூக ஊடகத் தொடர்பு
ஹெலன் ஹெய்ன்ஸும் நுஜென்டும் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு, ஹெய்ன்ஸின் பதிவொன்றுக்குப் பதிலளித்த நுஜென்ட், காலநிலை மாற்றத்தைத் தீவிரமாகக் கருத்தில்கொள்ளும் அரசியல்வாதி என அவரைப் பாராட்டும் வகையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர், 2021ஆம் ஆண்டு வரையில், ஹெய்ன்ஸைக் குறிப்பிட்டு மேலும் நான்கு பதில்களை அவர் வெளியிட்டுள்ளார். அவற்றில் எதுவும் ஹெய்ன்ஸுக்கு எதிரான கோபத்தையோ பகைமையையோ வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை.
நுஜென்ட் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர் எனத் தெரியவந்துள்ளது. போராட்டங்களில் பங்கேற்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.