ஆஸ்திரேலிய மொடலிங்கும் சமூக ஊடகப் பிரபலமுமான சஹாரா ரே (Sahara Ray), தனது 34ஆவது வயதில் காலமானார். அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்து ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார்.
“குடும்பத்தினர் சூழ்ந்திருக்க, மருத்துவமனையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். அவர் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டவர்” என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆஸ்திரேலியாவின் பிரபல அலைச்சறுக்கு விளையாட்டு வீரரான டோனி ரேயின் மகளான சஹாரா ரே, விக்டோரியா, கலிபோர்னியா மற்றும் ஹவாய் ஆகிய பகுதிகளில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார்.
மொடலிங் துறையிலும் சமூக ஊடகங்களிலும் புகழ்பெற்ற அவர், இன்ஸ்டாகிராமில் சுமார் ஒன்பது இலட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார். 2014ஆம் ஆண்டு தனது சொந்த நீச்சல் ஆடை வர்த்தகமான Sahara Ray Swim நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.
பிரபலங்களுடனான காதல் தொடர்புகள் காரணமாகவும் அவர் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியப் பாடகர் கோடி சிம்ப்சனுடன் அவர் காதல் உறவில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. 2016ஆம் ஆண்டு அமெரிக்கப் பாடகர் ஜஸ்டின் பீபருடன் ஹவாயில் விடுமுறையைக் கழித்தபோது இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர். அண்மைக் காலத்தில் அமெரிக்கப் பாடகரும் பாடலாசிரியருமான மோட் சன்னுடனும் அவர் நெருக்கமாக இருந்ததாகச் செய்திகள் வெளியாகின.
சஹாரா ரே, கடந்த ஜனவரி மாதம் ஸ்னோ (Snow) என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது கர்ப்பகால அனுபவங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் தளங்களில் பகிர்ந்துகொண்ட அவர், குழந்தையின் தந்தை யார் என்பதைப் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.
உயிரிழப்பதற்கு முன்னர் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கடைசிப் பதிவில், தனது மகளைக் குறிப்பிட்டு, “எனது முழு இதயமும் நீயே, குட்டி ஸ்னோ” என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.