பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் (ADF) இணைவதற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கும் பப்புவா நியூ கினியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 65 மில்லியன் ஆஸ்ஸ்திரேலிய டொலர் செலவில் முன்னோடித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த 100 இளைஞர்களை ஆஸ்ஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
போர்ட் மோர்ஸ்பியில் நேற்று நடைபெற்ற இரு நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்டக் கூட்டத்தின்போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு, கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்துள்ள புக்புக் (Pukpuk) உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கையின்படி, இரு நாடுகளும் தத்தமது பாதுகாப்புப் படைகளில் மற்றைய நாட்டின் குடிமக்களை இணைத்துக்கொள்ள முடியும். அத்துடன், ஆயுதத் தாக்குதல் மூலம் ஏதேனும் ஒரு நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பட்சத்தில், மற்றைய நாடு அதற்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான கடப்பாட்டையும் இந்த உடன்படிக்கை கொண்டுள்ளது.
18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாய்ப்பு
இந்தத் திட்டத்தின் கீழ், ஆரம்பகட்டமாக பப்புவா நியூ கினியா பல்கலைக்கழகம் மற்றும் பசிபிக் அட்வென்டிஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்களும் அண்மையில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், பப்புவா நியூ கினியாவின் இராணுவம், பொலிஸ் அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பு நிறுவனங்களில் முன்னர் பணியாற்றியிருக்கக் கூடாது.
ஆஸ்திரேலியக் குடிமக்கள் பாதுகாப்புப் படையில் இணைவதற்குப் பின்பற்றப்படும் அதே பாதுகாப்பு விதிமுறைகளும் தகுதித் தரங்களும் இவர்களுக்கும் பொருந்தும்.
தேர்வு செய்யப்படுபவர்கள் ஆரம்பத்தில் தற்காலிக விசாக்களின் கீழ் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர். தொடர்ந்து அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பணியாற்றுவதற்கு, பின்னர் அவுஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், முதல் குழுவினர் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் உத்தியோகபூர்வமாகப் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படையில் நிலவும் ஆட்சேர்ப்புக் குறைபாடுகளைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும் என அவுஸ்திரேலியப் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களை இணைத்துக்கொண்டு, ஆட்சேர்ப்பு நடைமுறைகள் சீராகச் செயல்படுவதை உறுதிப்படுத்திய பின்னர் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 65 மில்லியன் டொலர்களைச் செலவிடவுள்ளது. எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஆட்சேர்ப்பாளர்களை இணைத்துக்கொள்ளும் அளவுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்பு, பப்புவா நியூ கினிய இளைஞர்களுக்குப் பொருளாதார முன்னேற்றத்தையும் உயர்தரப் பயிற்சியையும் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்தத் திட்டம், எதிர்காலத்தில் பிராந்திய பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.