ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில், குடும்ப வன்முறை தொடர்பானதாகக் கூறப்படும் சம்பவமொன்றின்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில பொலிஸாரின் தகவலின்படி, வியாழக்கிழமை நண்பகல் 12.25 மணியளவில் க்ளென் அல்பைன் (Glen Alpine) பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, கைத்துப்பாக்கியொன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞரை பொலிஸார் எதிர்கொண்டுள்ளனர்.
பொலிஸாருக்கும் குறித்த இளைஞருக்கும் இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலின்போது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக முதலுதவி வழங்கியதுடன், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அவசர சேவையினரும் அவருக்கு சிகிச்சையளித்துள்ளனர். பின்னர், ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முக்கியமான சம்பவம் (Critical Incident) என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடமாக அடையாளப்படுத்தப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பொலிஸாரின் தொழில்முறை தரநிலைகள் பிரிவினால் (Professional Standards Command) சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அது சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்பான ஆணைக்குழுவின் (LECC) மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.