ஆஸ்திரேலியாவின் பிராந்தியப் பகுதிகளில் மனநலப் பராமரிப்புச் சேவைகளைப் பெறுவதில் நிலவும் குறைபாடுகள் குறித்து பெடரல் பொலிஸ் ஆணையாளர், கிரிஸ்ஸி பாரெட் கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் பிராந்தியப் பகுதியான வாங்கரட்டாவில் அமைந்துள்ள ஹெலன் ஹெய்ன்ஸின் தேர்தல் தொகுதி அலுவலகத்திற்கு வெளியே, நான்கு சக்கர வாகனத்தால் அவர் மோதப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கான நோக்கம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ் ஆணையாளர் கிரிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதே விசாரணையின் முதன்மை நோக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் ஏற்கெனவே மனநலப் பிரச்சினைகளுக்காகச் சிகிச்சை பெற்றதாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் பொலிஸார் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த நபரின் மனநல நிலை மற்றும் அவர் தொடர்புபட்டிருந்ததாகக் கூறப்படும் விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் விசாரணையின் ஒரு பகுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹெலன் ஹெய்ன்ஸ் அவரது அரசியல் பங்களிப்பைக் காரணமாகக் கொண்டு இலக்கு வைக்கப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அரசியல் பதற்றம், அச்சுறுத்தல்கள், அவமதிப்புகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
ஹெலன் ஹெய்ன்ஸ் இரு கால்களும் அகற்றப்பட்ட நிலையில், மெல்பேர்ன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதிலும், சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 43 வயதான பிரெண்டன் நுஜென்ட், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை, வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் அரச அதிகாரிக்குத் தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.